Published : 27 Nov 2020 03:12 PM
Last Updated : 27 Nov 2020 03:12 PM

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்குக: வைகோ

வைகோ: கோப்புப்படம்

சென்னை

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (நவ. 27) வெளியிட்ட அறிக்கை:

"வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உருவாகி, நவம்பர் 25 ஆம் தேதி வீசிய நிவர் புயலால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ,வேலூர் ,செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் பெய்த பலத்த மழையாலும், சூறைக்காற்றாலும் மிகுந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 ஏக்கர் மணிலா பயிர்கள், 50 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு உட்பட 5,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன. 200 ஏக்கர் வாழை மரங்கள் சரிந்து விட்டன.

விழுப்புரம் மாவட்டத்திலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; வாழை மரங்கள் சரிந்துள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐந்தாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கரும்பு, வாழை மரங்கள் முறிந்து ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மணிலா பயிர்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. அறுவடைக்கு ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் புயல், மழையில் முற்றாக அழிந்து விட்டன. நூற்றுக்கணக்கான குடிசைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதுடன் வாழை, பப்பாளி மரங்கள் அடியோடு பெயர்ந்து விழுந்து விட்டன.

புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் தடைப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பயிர்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையாகக் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஆவன செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், கரோனா கொடுந்துயரால் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்திட முடியாத சூழல் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

நெற்பயிர், வாழை, கரும்பு, பப்பாளி, மணிலா, மரவள்ளி உள்ளிட்ட அனைத்துச் சேதங்களையும் கணக்கிட்டு இழப்பீடு அளிக்க வேண்டும்.

குடிசை வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும் முழுமையான இழப்பீடு அளிக்க வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்த நெல் ஈரப்பதத்தைக் காரணம் காட்டி, கொள்முதல் செய்வதை நிறுத்தக் கூடாது.

நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளால்தான் மழை வெள்ளச்சேதங்கள் அதிகமாக இருக்கின்றன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்களுக்கு உதவிட மதிமுக தொண்டர்கள் மீட்புப் பணிகளில் முழு மூச்சாகச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x