Published : 27 Nov 2020 03:08 PM
Last Updated : 27 Nov 2020 03:08 PM

அரசுப் பள்ளி மாணவர்களின் தீராத கல்விக் கட்டணப் பிரச்சினை; திமுக ஏற்கத் தயார்: ஸ்டாலின் மீண்டும் அறிவிப்பு

அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அப்படி இயலாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி திமுக அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள செய்தி:

“நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டப்பேரவைத் தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் செய்யும் திறனற்ற அதிமுக ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கெனவே முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ளதாக 'தி இந்து' ஆங்கில நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அதுமட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவானி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.

இதுபோல மேலும் பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவே தகர்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும். அப்படி இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி திமுக அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x