Published : 27 Nov 2020 03:03 PM
Last Updated : 27 Nov 2020 03:03 PM

அரசுத் துறைப் பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையை முதல்வர் பழனிசாமி உடனடியாக கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கடமை உணர்வோடு நிறைவேற்றுகிற பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைத் தமிழக முதல்வர் உடனடியாக கைவிட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (நவ.27) வெளியிட்ட அறிக்கை:

"தமிழகத்தின் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பொறியாளர்கள். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பொறியாளர்கள் ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு குறைத்து வழங்குகிறது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பொறியாளர்கள்தான் தமிழக அரசின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சிப் பணிகளைக் களத்தில் நின்று செயல்படுத்தி வருகிறார்கள். இவர்களது ஊதியத்தைக் குறைப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியத்தைப் பொறியாளர்களுக்கு 2010 இல் திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக அரசு 2013இல் உதவிப் பொறியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் ஊதிய விகிதத்தை வழங்கியது. இதை எதிர்த்துப் பொறியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். நீதிமன்றத்திலும் முறையிட்டார்கள். ஆனால், அதிமுக அரசு அநீதியைப் போக்க முயலவில்லை.

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழுவினை தமிழக அரசு அமைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிபதி முருகேசன் குழு அறிக்கை கொடுத்தும், 2013இல் குறைத்து வழங்கப்பட்ட ஊதியத்தையே இப்போதும் வழங்கி, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

நீதிபதி முருகேசன் குழு அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிடாமலும், குழு அளித்த பரிந்துரைகள் தொடர்பாக பொறியாளர்கள் சங்கப் பிரதிநிதிகளின் கருத்தை அறியாமலும் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கின்ற பொறியாளர்களின் கடும் பணி குறித்து கவலைப்படாமலும் எதேச்சதிகார முறையிலும் ஊதியக் குறைப்பு ஆணைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் வழங்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசு நீதி வழங்காத நிலையில், நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையை நிறைவேற்றாத சூழலில்தான் பொறியாளர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டார்கள். நீதிமன்றம் சென்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் பழிவாங்கப்படுவது தமிழக ஆட்சியாளர்களின் அராஜக போக்கையே வெளிப்படுத்துகிறது.

பொறியாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது, சமநிலையில் பணியாற்றுகிற மற்ற ஊழியர்களை விட குறைவான ஊதியத்தை வழங்குவது என்பது திறமையான பொறியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுவதைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

எனவே, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கடமை உணர்வோடு நிறைவேற்றுகிற பொறியாளர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையைத் தமிழக முதல்வர் உடனடியாக கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x