

இன உணர்வைத் தூண்டும் விதமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருப்பதாக அளிக்கப்பட்ட புகாருக்கு நடிகர் சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.
கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ‘பொன்னி வள வீர சரித்திரம்’ என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பு ஆகிறது என்றும் அதில் நடிகர் சிவக்குமார் இன உணர்வைத் தூண்டும்விதமாக பின்னணி வசனம் பேசியிருப்பதாகவும் ஈரோடு ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது: கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் கரூர் பகுதிகளில் நடந்த வரலாற்று புதினம் இது. உடுக்கை பாடலாகவும், நாட்டுப்புறப் பாடல் வழியாகவும் பிரபலம் ஆனது. கனடாவைச் சார்ந்த பிருந்தா பெக் என்கிற பெண்மணி கரூர் பகுதிகளில் 1962 முதல் 1964 வரை தங்கியிருந்து தன்னுடைய சொந்தப் பணத்தை எல்லாம் இழந்து ஆராய்ச்சி செய்து 40 மணி நேர ஆடியோவாக பதிவு செய்திருக்கிறார். இப்படி நல்ல வரலாற்று விஷயங்களை சேகரித்து கொடுத்ததற்காக தமிழ்நாட்டில் உள்ள நாம் எல்லோரும் பிருந்தா பெக்கிற்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேபோல ‘பொன்னழகர் என்னும் கல்லழகர் அம்மானை’, ‘வரகுண்ணா பெருங்குடி கூட்டம் பொன்னர் சங்கர் வரலாற்று நூல்’, ‘அண்ணன்மார் சுவாமி கதை’ ஆகிய வரலாற்று நூல்களை எல்லாம் ஆதாரமாக வைத்து 1988- ம் ஆண்டு 503 பக்கத்தில் வெளிவந்த ‘பொன்னர் சங்கர்’ வரலாற்று நூலை கருணாநிதி எழுதியிருக்கிறார். இதற்காக கொங்கு நாட்டு மக்களும் அவருக்கு நன்றி கூறினார்கள். சமீபத்தில் இதை பொன்னர் சங்கர் என்ற திரைப்படமாகவும் எடுத்தார். இவற்றை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு வரலாற்றுப் பதிவாக வந்ததைத்தான் தற்போது அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில நிமிட குரல் பதிவாகக் கொடுத்திருக்கிறேன். தற்போது இந்த விஷயத்தை சாதிப் பிரச்சினையாக எடுத்துக்கொள்வது வெளிநாட்டிலிருந்து வந்திருந்து இங்கே தங்கி ஒரு வரலாற்று சிறப்புமிக்க விஷயத்தைப் பதிவு செய்த அந்த பெண்மணியைக் கொச்சைப்படுத்துவதாகவே தெரிகிறது. சாதி உணர்வுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கே வெவ்வேறு சாதிகளில் மணம் முடித்திருக்கிறேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளைக் கடைபிடிப்பவன். இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.