தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றம் விடுமுறை: முதல்வர் பழனிசாமி வரவேற்பு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்கு இதுவரை உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டதில்லை. இந்நிலையில், 2021 பொங்கல் பண்டிகைக்கு ஜன. 14, 15 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படது இதுவே உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாகும்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (நவ. 27) வெளியிட்ட அறிக்கை:

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்று திருவள்ளுவரால் உயர்வாய் உரைக்கப் பெற்ற உழவர்களின் பெருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 2021 ஜனவரி, 14 மற்றும் 15 தேதிகளில் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அறிவிப்பினை மனதார வரவேற்கிறேன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசும் தொடர்ந்து இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகின்றது.

தமிழரின் பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கல் நன்னாளின் சிறப்பினை அனைவரும் அறியும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்த உச்ச நீதிமன்றத்திற்கு இத்தருணத்தில் என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in