

தென்கிழக்கு வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்சமாக தென் தமிழகப் பகுதிக்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“கரையைக் கடந்தபின் நிவர் புயல் வலுவிழந்த நிலையில் தமிழக மேற்குப் பகுதிகளில் நிலவியது. தற்போது அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தெற்கு ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் வட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
அடுத்த வரும் 2 தினங்களைப் பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வலுப்பெற்று எதிர்வரும் 30-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
மேலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நவம்பர் 30-ம் தேதி தமிழக மேற்கு திசையில் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் 3 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
அதேபோல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றால் தென் தமிழகப் பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. மேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. தொடர்ந்து கண்காணிக்கிறோம். தற்போதைய நிலைப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற அதிக வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த நவ.1 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இயல்பு மழை அளவு 34 செ.மீ. பெய்த அளவு 29 செ.மீ. இது 15% இயல்பை விடக் குறைவு. 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை வடகிழக்கு மாவட்டங்களில் இயல்பை விட அதிகம்.
தற்போது 48 மணி நேரத்திற்குப் பின் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி குறித்து ஆய்வு செய்தபின்னர் உறுதியாக அறிவிப்போம். பொதுவாக தென்தமிழகப் பகுதிகளுக்கு அதிக மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, வட தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்களுக்குத் தற்போதைக்கு எச்சரிக்கை இல்லை. 5 நாட்கள் கழித்துதான் சொல்வோம்”.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.