

நிறைய முன்னெச்சரிக்கைகளை எடுத்து, நிவர் புயலால் தமிழகத்தில் உயிர் பலி இல்லாமல் தடுத்து, ஒட்டுமொத்த மக்களைப் பாதுகாத்த அரசின் மீது ஸ்டாலின் வீண்பழி சுமத்தி, அரசியல் ஆதாயம் தேடுவதா என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் அதிமுக கழக அம்மா பேரவையின் சார்பில் கரோனா நோய்த் தொற்றாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து உணவுக்கூடத்தை ஆய்வு செய்தபின், அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி 137 நாட்களைக் கடந்து உணவே மருந்தாக அம்மா கிச்சன் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது நிவர் புயல் தாக்குதலால் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்படாவண்ணம் முதல்வர் புயலைக் காட்டிலும் அதிதீவிரப் போர்க்கால நடவடிக்கையை எடுத்தார்.
கடந்த 23ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக 25ஆம் தேதி தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியைப் பார்வையிட்டு நீர்வரத்து அதிகமாக இருந்ததால், உபரி நீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.
புயல் கரையைக் கடந்த உடன் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்திற்கு நேற்று நேரடியாகச் சென்று வாழைத் தோப்புகளைப் பார்வையிட்டு, அதன் தொடர்ச்சியாகத் துறைமுகப் பகுதி, மீனவர்கள், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடத்தில் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்துக் கண்டறிந்தவுடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்தத் தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
அதேபோல் துணை முதல்வரும் சென்னை வேளச்சேரி, தரமணி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். முதல்வரும், துணை முதல்வரும் அதிமுக சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகள் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்
இன்றைக்குப் பல்வேறு ஊடகங்கள்கூட முதல்வர் நடவடிக்கையால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. அதேபோல் பொருள் சேதம் குறைவாக உள்ளது என்று பாராட்டியிருந்தனர். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரும் தமிழகத்தின் நிலவரங்களைக் கேட்டறிந்து, தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறித் தமிழகத்தின் செயல்பாட்டினைப் பாராட்டினார்
இதையெல்லாம் தெரிந்த திமுக தலைவர் ஸ்டாலின், நிவர் புயலிலும்கூட அரசியல் செய்ய நினைக்கிறார். ஆனால், இன்றைக்கு புயலால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்டறிந்து அதன்மூலம் 2,25,398 நபர்களை 3,042 நிவாரண மையங்களில் தங்கவைத்து, அங்கு அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
அது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 4,133 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை பெய்யும்போது நீர் தேங்கினால், மழை விட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குள் வடிந்து விடக்கூடிய நிலையைத் தற்பொழுது ஏற்படுத்தியுள்ளோம். இதுமட்டுமல்லாது இயற்கைச் சீற்றங்களை எப்படிக் கையாளுவது என்று பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றி வருகின்றன.
ஆனால், அரசின் போர்க்கால நடவடிக்கைகளைத் தெரிந்துகொண்டே ஸ்டாலின், மனசாட்சி இல்லாமல் இதில் கூட அரசியல் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். புயலிலும் மக்கள் நலனை எண்ணிப் பாராமல் அரசியல் செய்ய நினைத்தால், அவருக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பிப்பார்கள்’’.
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.