

புயல் பேரிடர் காலங்களில் தமிழக மீனவ மக்களின் முதலீடுகளையும், மீன்பிடி சாதனங்களையும், பாதுகாக்கத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசுக்கு மீனவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய மீனவர் நலச்சங்கம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“பாரம்பரிய தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமும், அவர்களின் முதலீடுகள் மற்றும் சொத்துகளாய் விளங்கக்கூடிய தங்களது பைபர் படகுகள், பைபர் கட்டுமரங்கள், நாட்டுப் படகுகள், ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்ற பல்வேறு வகையான மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரங்கள் போன்ற மீன்பிடி சாதனங்கள் ஆகும்.
தமிழக மீனவர்களின் ஒவ்வொரு மீன்பிடி பைபர் படகிலும், வெவ்வேறு மீன்பிடி சீசனுக்கேற்ற, குறிப்பிட்ட வகை மீன்களைப் பிடிக்க என, சுமார் பத்து முதல் 15 வகையான மீன்பிடி வலைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வகையான மீன்பிடி வலையும், சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை மதிப்புள்ளதாகும்.
புயல் போன்ற இயற்கைச் சீற்றக் காலங்களில் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளின் மீது, புயல் காற்றுடன் கலந்து வீசிய மணல்களால் மூடி, அதிகப்படியான மீன்பிடி வலைகள், மணல் மேடுகளாகவும், மணல் குன்றுகளாகவும் உள்ளன. மேற்கண்ட மணல்களை அகற்றும்போது மீன்பிடி வலைகள் ஒன்றோடு ஒன்று சிக்கி, சேதாரமடைந்து மீனவ மக்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிவர் புயல் காற்றால், சேதாரமடைந்த மீனவ மக்களின் பல்வேறு வகையான மீன்பிடி வலைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஆண்டிற்கு 100 கிலோ மீன்பிடி வலைகளை 50% மானிய விலையில் வழங்க வேண்டும். பிற கடலோர மாவட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி வலைகளைப் பாதுகாக்கவும், பழுது பார்க்கவும் மீன்வலைக் கூடங்கள் அமைத்துத் தந்துள்ளதைப் போல, சென்னை மாவட்ட மீனவ கிராமங்களிலும் கடற்கரையில், மீன்வலைக் கூடங்கள் அமைத்து மீனவ மக்களின் முதலீடுகள் மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நிவர் புயல், சூறாவளிக் காற்றால் கடற்கரையில் பாதுகாப்பாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவ மக்களின் அனைத்து பைபர் படகுகள் வெளிப்பொருத்தும் இயந்திரத்திற்குள்ளும் நுண்ணிய கடல் மணல் துகள்கள் நிறைந்து காணப்படுகின்றன. மீனவ மக்களின் ஒவ்வொரு பைபர் படகு வெளிப்பொருத்தும் இயந்திரத்தையும் மெக்கானிக்கை வைத்துப் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் அனைத்து மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
நிவர் புயலால் பழுதான தமிழக மீனவர்களின் அனைத்து பைபர் படகு வெளிப்பொருத்தும் இயந்திரங்களை உடனடியாகப் பழுதுபார்க்க இழப்பீடு அல்லது புயல் நிவாரண உதவி வழங்க வேண்டும்.
மீனவ மக்கள் வாங்கும் பைபர் படகு வெளிப்பொருத்தும் இயந்திரங்களுக்கு 50% மானியம் வழங்க வேண்டும். புயல் போன்ற பேரிடர் காலங்களில் இருந்து மீன்பிடி சாதனங்களைப் பாதுகாக்க, ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் மீன்பிடி இயந்திரங்கள் பாதுகாப்புக் கூடங்கள் அமைத்துத் தர வேண்டும்.
பைபர் படகுகளைக் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்கத் தேவையான பொதுப் பயன்பாட்டு இடங்கள், அதற்கான கருவிகள் அடங்கிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழக முதல்வரையும், மீன்வளத்துறை அமைச்சரையும் தென்னிந்திய மீனவர் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்”.
இவ்வாறு தென்னிந்திய மீனவர் நலச்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.