

தென் தமிழகத்தில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வெண் பாவூர், தஞ்சாவூரில் 14 செ.மீ., திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம், மதுரை மாவட்டம் சோழ வந்தானில் 13 செ.மீ., திருச்சி மாவட்டம் துறையூரில் 12 செ.மீ., நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தில் 11 செ.மீ., சேலம் மாவட்டம் ஏற்காடு, புதுக்கோட்டை மாவட்டம் விரலிமலையில் 10 செ.மீ., ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப் பாளையம், சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருப்பூர் ஆகிய இடங்களில் 9 செ.மீ. மழை நேற்று முன் தினம் பதிவாகியுள்ளது.
அதிக மழை
மதுரையில் கடந்த 10 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 8.8 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு 13 செ.மீ. வரை பெய்துள்ளது. இதே போன்று பிற மாவட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது வலுவிழந்து வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. எனினும் காற்றும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் பல இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.