Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM

மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் ஏழ்மை காரணமாக சமையல் பணிக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்

யுவன்ராஜ்

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சிசூளேஸ்வரன்பட்டி செம்பாக வுண்டர் காலனி மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்தவர் முருகன். மில் தொழிலாளி. கடந்த 7 மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் முருகன் உயிரிழந்து விட்டார். இவரது இரண்டாவது மகன் யுவன்ராஜ் (18), கடந்த ஆண்டு சமத்தூரில் உள்ள வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.

இவர் அரசு பொதுத் தேர்வில் 600-க்கு 445 மதிப்பெண்களும், நீட் தேர்வில் 155 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 450-வது இடம் பெற்றார். சென்னையில் நடைபெற்ற மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் இவருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

எனினும், மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.4லட்சத்துக்கு மேல் செலவாகும் என தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த யுவன்ராஜால் அவ்வளவு கட்டணத்தை செலுத்தமுடியாது என்பதால், தற்போதுசமையல் பணிக்குச் சென்று வருகிறார்.

இதுகுறித்து யுவன்ராஜ் கூறும்போது, "தந்தை இறந்து விட்டதால், அண்ணன் பனியன் நிறுவனத்துக்கு பணிக்குச் சென்று, குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். தம்பி 11-ம் வகுப்பு படித்து வருகிறான். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும், பணம் இல்லாததால் மருத்துவம் படிக்க இயலவில்லை. தற்போது திருமண விழாக்களில் சமையல் வேலைக்கு சென்று வருகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x