Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

புயல் பாதிப்பிலிருந்து தப்பியதால் டெல்டா விவசாயிகள் நிம்மதி: அச்சத்திலிருந்து மீண்ட காரைக்கால் மக்கள்

கோப்புப்படம்

திருச்சி/ தஞ்சாவூர்

‘நிவர்’ புயல் பாதிப்பிலிருந்து தப்பியதால் டெல்டா மாவட்ட விவ சாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள 8 ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டில் தான் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி ஏறத்தாழ 4.5 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் டெல்டா மாவட்டங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. புயல், தொடர்ந்து மழை பெய்தால், பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் டெல்டா விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்தும், வீடுகள், படகுகள் சேதமடைந்தும் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தங்களது பொருளாதாரத்தை சீரமைக்க போராடி வரும் விவசாயிகளுக்கு ‘நிவர்’ புயல் அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை விவசாயிகள் மேற்கொண்ட னர்.

இந்தநிலையில், புயல் டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் புதுச்சேரி அருகே கரையை கடந்ததால், டெல்டா விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டம் மருங்கபள்ளத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறும்போது, ‘‘கஜா புயலின்போது அரசு எச்சரிக்கை விடுத்தபோதும் விவசாயிகள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. தற்போது மீண்டும் ஒரு புயலை எதிர்கொள்ள வேண்டுமோ என்ற அச்சத்தில் இருந்தோம். ஆனால், புயல் வடக்கு நோக்கிச் சென்றதால் டெல்டா மாவட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. இப்போது தான் எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

தப்பியது காரைக்கால்

வங்கக் கடலில் ‘நிவர்' புயல் மையம் கொண்டிருந்த நிலையில், நவ.25-ம் தேதி காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கன மழையும், பலத்த காற்றும் வீசும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தால் பல் வேறு முன்னேற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன. ஆட்சியர் அர்ஜூன் சர்மா நேற்று முன்தினம் நள்ளிரவு வரை பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில் தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு மரக் கிளைகளை வெட்டுதல், மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை, சில இடங்களில் லேசான காற்று வீசத் தொடங்கியது. நள்ளிரவு புதுச்சேரிக்கு அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கி முடியும் வரை இதே வானிலையே காரைக்கால் மாவட்டத்தில் நீடித்தது. தொடர்ந்து, நேற்று காலை வானம் மேக மூட்டமாகக் காணப்பட்ட நிலையில், பின்னர் வெயில் அடிக்கத் தொடங்கியது. ‘நிவர்’ புயலால் பெருமளவில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்திலிருந்த காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, புயல் தாக்கத்திலிருந்து தப்பியது நிம்மதியை தந்தது.

காரைக்காலில் நேற்று காலை 5 மணி வரை 86 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x