

திருநெல்வேலி - தென்காசி இடையே திட்டமிடப்பட்ட நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி, கடந்த 7 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டிருப்பது, அனைத்து தரப்பின ரையும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பத்துக்கு பதிலளித்த மாநில நெடுஞ்சாலைத் துறை, தற்போதுள்ள 45.6 கிமீ இருவழிப் பாதை யை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ. 480.60 கோடிக்கான திட்டத்தை முடிக்க ஒப்பந்தக்காரரை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாக பதிலளித்துள்ளது.
திருநெல்வேலி - தென்காசி இருவழிச் சாலையின் ஓரத்தில் 2018-ம் ஆண்டிலேயே அவசர அவசரமாக புளி, வேம்பு, வாகை மற்றும் நூற்றாண்டு பழமையான ஆலமரங்கள் உட்பட 1,160 முழுமையாக வளர்ந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறை வெட்டியது.
தொடக்கத்தில் இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்திரு ந்தவர் பணிகளை மேற்கொள்ளாத நிலையில், நெடுஞ் சாலைத் துறையால் 2019 நவம்பரில் மறு ஒப்பந்தம் வழங்கப்பட்டு 10 மாதங்கள் கடந்தும் பணிகளை தொடங்காதது அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கிறார்கள்.
திருநெல்வேலி - தென்காசி சாலையானது தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் மிக முக்கிய சாலை ஆகும். தினசரி 500-க்கும் மேற்பட்ட சிமென்ட், மரத்தடி, காய்கறி மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வரும் அத்தனை பொருட் களும் இந்த வழியாகத்தான் கேரளா செல்கின்றன. இரு மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார தொடர்புக்கு இந்த சாலை மிக முக்கியமானதாகும். குற்றாலம், தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல இந்த சாலையே பிரதானம்.
இரவில் இந்த சாலையில் பயணம் செய்யும் போது சாலையில் உள்ள குண்டுகுழிகள் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பல்வேறு பணி நிமித்தமாக திருநெல்வேலி செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகும் சூழல் உள்ளது.
போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. மரங்களை வெட்டியது தவிர, வேறு எந்த முன்னேற்றமுமின்றி, நான்கு வழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, தென்காசி - திருநெல்வேலி மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள் கட்சி பேதமின்றி ஒருமித்த குரலில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.