Published : 27 Nov 2020 07:13 AM
Last Updated : 27 Nov 2020 07:13 AM

‘நிவர்’ புயல் பாதித்த மாவட்டங்களில் 80 சதவீத இடங்களில் மின்சாரம் விநியோகம்: அமைச்சர் தங்கமணி தகவல் 

‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை பெரும்பாக்கம் துணை மின்நிலையத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று பார்வையிட்டார். உடன் மின்வாரியத் தலைவர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்டோர்.

சென்னை

‘நிவர்’ புயல் பாதித்த மாவட்டங்களில் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

‘நிவர்’ புயலின்போது மின்வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படா
மல் மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.

16 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட 16 மாவட்டங்களில் 5,484 பீடர்கள் எனப்படும் மின்வழித் தடங்கள் உள்ளன. இதில், 2,250 பீடர்களை பாதுகாப்பு கருதி மின்வாரியமே நிறுத்தியது. இதில், தற்போது 1,317 பீடர்களை சரிபார்த்து உடனடியாக மின்இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 933 பீடர்கள் மட்டுமே மீதம் உள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை 1,707 பீடர்கள் உள்ளன. இதில், 174 பீடர்களில் மட்டுமே மின்இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 596-ல் 176, செங்கல்பட்டு மாவட்டத்தில் 451-ல் 154, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 322-ல்
152 பீடர்களில் மின்இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.

கடலூர், விழுப்புரத்தில் அதிக மழை கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தது. புயல் வேகத்தை விட மின்வாரியம் வேகமாக செயல்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் வெறும் 28, விழுப்புரம் மாவட்டத்தில் 20 பீடர்களில் மட்டுமே இன்னும் மின்இணைப்பு கொடுக்க வேண்டி உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், அங்கு முழு அளவில் மின்விநியோகம் செய்ய முடியவில்லை. மின்வாரியமும், மாநகராட்சியும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளன. தண்ணீர் குறையக் குறையபடிப்படியாக மின்சாரம் வழங்கப் படும்.

144 மின்கம்பங்கள் சேதம்

இந்தப் புயலில் 144 மின்கம்பங்கள் மட்டுமே சேதம் அடைந்து உள்ளன. உயர்மின் அழுத்த தடத்தில் 11 கம்பங்களும், ஒரு துணைமின் நிலையமும் சேதம் அடைந்து உள்ளன. இந்த 16 மாவட்டங்களில் மொத்தம் 933 பீடர்களில் மட்டுமே மின்இணைப்பு வழங்க வேண்டி உள்ளது. அதில், 80 சதவீதம் இன்றைக்குள்ளும் (நேற்று), எஞ்சிய 20 சதவீதம் நாளைக்குள் (இன்று) வழங்கப்பட்டு விடும்.

இதுவரை ரூ.1.5 கோடி இழப்பு‘நிவர்’ புயலின்போது மின்வாரியத்துக்கு இதுவரை ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமை
யாக ஆய்வு செய்த பிறகே இழப்பு எவ்வளவு என்பது குறித்து தெரிய வரும்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், 10 ஆயிரம் கேங்மேன்கள் பணி நியமனத்தில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தீர்ப்பு வந்த
உடன் அவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

மின்வாரியம் தனியார்மயமாக்கப்படும் என கூறுவதும் தவறான தகவல். ஊழியர் பற்றாக்குறை காரணமாக, துணைமின் நிலையங்களை பராமரிக்கும் பணி, தனியாருக்கு விடப்பட்டு உள்ளது. கேங்மேன் பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்ட உடன் தனியாருக்கு விடப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

முன்னதாக, அமைச்சர் தங்கமணி நேற்று காலை பெரும்பாக்கத்தில் உள்ள துணைமின் நிலையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை பெரும்பாக்கம் துணை மின்நிலையத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று பார்வையிட்டார். உடன் மின்வாரியத் தலைவர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்டோர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x