நெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள் சுணக்கம்

நெல்லையில் தீபாவளிக்குப் பின் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: முகக்கவசம், தனிமனித இடைவெளியில் மக்கள் சுணக்கம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தீபாவளிக்குப்பின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதில் பெரும்பாலும் மக்கள் அக்கறை செலுத்தவில்லை.

திருநெல்வேலியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தீபாவளியன்று கடந்த 14-ம் தேதி வெறும் 3-ஆக இருந்தது. தொடர்ந்து 3 நாட்களுக்கு தலா 2 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு குறைந்திருந்தது.

கடந்த 20-ம் தேதியிலும் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 21-ம் தேதியிலிருந்து பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 11 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது. இன்று மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 3 பேருக்கும், மானூர், பாளையங்கோட்டை, வள்ளியூர் வட்டாரங்களில் தலா ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அம்பாசமுத்திரம், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு வட்டாரங்களில் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

மாநகரில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் மக்களிடம் முகக்கவசம் அணிவது, பொதுஇடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை திரவ சோப்பால் கழுவுவது குறித்த அக்கறை குறைந்திருக்கிறது.
வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் இருப்பதுபோல், அந்த நிறுவனங்களில், கடைகளில் பணியாற்றுவோரும் முககவசம் அணியால் இருக்கிறார்கள். காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகளிலும் விற்பனையாளர்கள் முககவசம் அணியாமல் இருக்கிறார்கள்.

பேருந்துகளில் பயணம் செய்வோரில் பலரும் முகக்கவசம் அணிவதில்லை.

தீபாவளியை முன்னிட்டு கடைவீதிகளிலும், வணிக நிறுவனங்களிலும் கூட்டம் அலைமோதிய நிலையில், இனிவரும் பண்டிகை காலங்களிலும் மக்கள் கூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தால் கரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது திருநெல்வேலி மாநகரில் மக்கள் மத்தியில் அச்சம் காணப்பட்டது. ஆனால் அதை இப்போதெல்லாம் காணமுடியவில்லை. பலர் முகக்கவசம் இல்லாமல் சகஜமாக நடமாடுகிறார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் பெயரளவுக்கு திரவ சோப் வழங்கும் அமைப்புகள் இருக்கின்றன. உடல் வெப்பநிலை பரிசோதனைகளையும் முறையாக மேற்கொள்ளவில்லை.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், நுகர்வோர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணந்திருக்கவும், முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், சமூக இடைவெளியின் அவசியம், கைகழுவுதலின் அவசியத்தை உணர்ந்து, முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்பதற்கான விளம்பரப் பலகையினை கடையின் நுழைவுவாயிலில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளை அறிவுறுத்தியிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in