Last Updated : 26 Nov, 2020 07:14 PM

 

Published : 26 Nov 2020 07:14 PM
Last Updated : 26 Nov 2020 07:14 PM

சமூக வலைதளங்களில் உரிமை சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

சட்ட தின விழாவில் காணொலி காட்சி வழியாக உரையாற்றும் உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி என்.கிருபாகரன்.

மதுரை

சமூக வலைதளங்களில் உரிமை சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.

உயர் நீதிமன்ற கிளை பார் அசோசியேஷன் சார்பில் காணொலி வழியாக சட்ட தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு பார் அசோசியேஷன் தலைவர் என்.கிருஷ்ணவேனி தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஸ்ரீனிவாசராகவன் தொகுத்து வழங்கினார்.

இதில் உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:

அரசியலமைப்பு சட்டம் அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், அரசியலமைப்பு சட்டக் கடமைகள் பல்வேறு வகையில் மீறப்படுகின்றன.

அரசியல்வாதிகள் ஓட்டுக்காக மதம், சாதி, மொழியின் பெயரால் மக்கள் பிரிக்கின்றனர். கொள்கை வகுப்பவர்கள் தேர்தலை மனதில் வைத்து மக்களை ஜாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிக்காமல் சரிசமமாக பாவிக்க வேண்டும்.

இந்தியாவில் சிறப்பான அடிப்படை உரிமைகள் உள்ளன. இதில் உரிமைக்கான சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதலில் அரசியல் தளங்களிலும் தற்போது சமூக வலைதளங்களிலும் உரிமைச் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

நாட்டின் குடிமகன்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு உரிமைகளைக் கோர வேண்டும். தற்போது அதற்கு எதிர்மாறாக நடைபெறுகிறது.

மக்கள் பங்கேற்பு, ஒத்துழைப்பு இல்லாமல் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது. மக்கள் கடமைகளை நிறைவேற்றி உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகளவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு வகையில் மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், மற்றொரு பக்கம் இப்போராட்டங்களால் மாநிலத்தின் வளர்ச்சி தடைபடுவதை நினைத்து வருந்த வேண்டியதுள்ளது.

தொடர் போராட்டங்களால் மாநிலத்தின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலைவாய்ப்புகள் குறைகின்றன. வேலைக்காக மக்கள் வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

வழக்கறிஞர்கள் உண்மையில் பொதுநலன் இருந்தால் மட்டுமே பொதுநல மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் உண்மையான வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வரும். தேவையற்ற வழக்குகள் தவிர்க்கப்படும்.

நீதிமன்றத்தின் பொன்னான நேரம் வீணடிக்கப்படாது.

இவ்வாறு நீதிபதி பேசினார்.

வழக்கறிஞர் பார்த்தீபன் சட்ட தின உறுதிமொழி வாசித்தார். பார் அசோசியேஷன் பொதுச் செயலர் என்.இளங்கோ நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x