

சிவகங்கை அருகே கண்மாய் நிரம்பியும் மடை இல்லாததால் 6 ஆண்டுகளாக 100 ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
சிவகங்கை அருகே கவுரிப்பட்டியில் உள்ள கவுரி கண்மாய் மூலம் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகின்றன. ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாயை 15 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரவில்லை. மடையையும் சீரமைக்காததால் 6 ஆண்டுகளுக்கு முன், மடை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது.
இதனால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து ஒன்றிய அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மண்ணைக் கொண்டு அடைத்தனர். மேலும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் கண்மாயை தூர்வாரி, மடையை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார்.
ஆனால் சீரமைத்து தரவில்லை. மேலும் குடிமராமத்து திட்டத்தில் காளையார்கோவில் ஒன்றியத்தில் பல கண்மாய்களை தூர்வாரிய அதிகாரிகள், இந்த கண்மாயை கண்டுகொள்ளவில்லை. இந்தாண்டு சமீபத்தில் பெய்த மழையில் கண்மாய் முழுவதும் நீரம்பியும், மடை இல்லாததால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாதநிலை உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
இதுகுறித்து கவுரிப்பட்டி விவசாயிகள் கூறியதாவது: ஆறு ஆண்டுகளாக கண்மாய் நிரம்பினாலும், மடை இல்லாததால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
இதனால் பயிர்களை காப்பாற்ற முடிவதில்லை. இருந்தாலும் நிலங்களை தரிசாக விட மனமின்றி ஆண்டுதோறும் சாகுபடி செய்து வருகிறோம். கண்மாயை தூர்வாரவிட்டாலும் பரவாயில்லை. மடையாவது சீரமைத்து தர வேண்டும், என்று கூறினர்.