

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், முன்னறிவிப்பின்றி விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்துவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் அருகே உள்ள செண்பகத்தோப்பு அணையின் கட்டுமானப் பணி கடந்த 2001 முதல் 2007-ம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. அப்போது, 7 ஷட்டர்கள் இயங்காததால், அணையின் கட்டுமானப் பணி முழுமை பெறவில்லை. முழுக் கொள்ளளவான 62.32 அடிக்குத் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை. 47 அடிக்கு மட்டும் தண்ணீர் சேமிக்கப்பட்டது. பருவமழையின்போது, அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால், செயல்படாமல் உள்ள ஷட்டர்களைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து விவசாயிகளின் 14 ஆண்டுகாலக் கோரிக்கை நிறைவேறும் வகையில் ரூ.16.37 கோடியில் 7 ஷட்டர்களைச் சீரமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது. இதனால் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில், முதன்முறையாக முழு கொள்ளளவுக்குத் தண்ணீரைச் சேமிக்கப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, அணையின் நீர்மட்டம் 48 அடியைக் கடந்த வாரம் கடந்தது.
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக, ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து நேற்று இரவு திடீரென அதிகரித்தது. விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்ததால், காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 57 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால், அணையை முதன்முறையாகத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி உபரி நீரை, 7 ஷட்டர்கள் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று மதியம் 12 மணியளவில் திறந்து வைத்தார். அப்போது ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
செண்பகத்தோப்பு அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டதால், ராமநாதபுரம், மல்லிகாபுரம், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதுகுறித்துக் கிராம மக்கள் கூறும்போது, “செம்பரம்பாக்கம் ஏரியைக் கடந்த 2015-ல் முன்னறிவிப்பு இல்லாமல் திறந்ததுபோல், செண்பகத்தோப்பு அணையை இன்று திறந்துவிட்டுள்ளனர். இதனால், கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்குக் காரணம்” எனக் குற்றம் சாட்டினர்.
58 அடியை எட்டியது
62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 2 மணி நிலவரப்படி 58 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6,667 கன அடி தண்ணீர் வருகிறது. அது அப்படியே வெளியேற்றப்படுகிறது. 287 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில், 243 மில்லியன் கன அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைப் பகுதியில் 153.80 மி.மீ. மழை பெய்துள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால், கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.