Published : 26 Nov 2020 05:13 PM
Last Updated : 26 Nov 2020 05:13 PM

திட்டப் பணிகள் என்ற பெயரில் வீணாகும் மக்களின் வரிப்பணம்: சிங்காநல்லூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு

எம்எல்ஏ கார்த்திக்

கோவை

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் திட்டப் பணிகள் என்ற பெயரில் தேவையற்ற இடங்களில் மக்களின் வரிப்பணம் செலவழிக்கப்பட்டு வருவதாகச் சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் இருக்கும் ராஜ வாய்க்கால், நொய்யல் ஆறு உள்ளிட்ட அனைத்து நீர்நிலை, ஓடை, மழைநீர் வடிகால்களில் புதர்கள், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து, அடைத்துக்கொண்டு, நீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி, மழைக் காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து, துர்நாற்றம் மிகுந்து, கொசுக்கள் உற்பத்தி ஆகியுள்ளன.

உதாரணமாக மாநகரின் 39-வது வட்டம், பீளமேடு, பொரிக்கடைச் சந்துப் பகுதியில் ஒரு கழிவுநீர்க் குட்டை உள்ளது. இதில் முழுமையாகக் கழிவுநீர் நிரம்பி வழிந்து இப்பகுதியில் மிகப்பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதுபோலவே சிங்காநல்லூர், ஹோப்காலேஜ், வரதராஜபுரம் பகுதிகளில் சாக்கடை, கேபிள் பதிப்பு போன்ற பணிகளுக்காகத் தோண்டபட்ட சாலைகள் சீர் செய்யப்படாமல் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் குப்பைகள் எடுக்கப்படாமல் தேக்கமடைந்து கிடக்கின்றன. இதுகுறித்துப் பல்வேறு அமைப்புகள் புகார் செய்தும் மாநகராட்சி அலுவலர்கள் கண்டுகொள்ளாத நிலை நீடிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தப் பகுதிகளைப் பார்வையிட்ட திமுகவின் கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''இதுகுறித்து, கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து கோவை மாநகராட்சி ஆணையரிடத்தில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளேன். இதுவரை எதுவுமே சுத்தம் செய்யப்படவில்லை. நொய்யல் குளங்களுக்குச் செல்லும் ராஜ வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து நீர்வழித் தடங்களும், மழைநீர் வடிகால்களும் ( சாக்கடை ) தூர் வாரப்படுவதில்லை. இதனால் பல்வேறு நோய்களைப் பரப்புகின்ற இருப்பிடமாக, சுகாதாரச் சீர்கேட்டின் ஒட்டுமொத்த இருப்பிடமாக கோவை மாநகராட்சிப் பகுதிகள் இருக்கின்றன.

கோவை சுங்கம் மேம்பாலப்பணி

கடந்த 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.377 கோடி நிதி ஒதுக்கி, தொடங்கி வைக்கப்பட்ட பாதாளச் சாக்கடைக் கட்டுமானப் பணிகள் பிறகு வந்த அதிமுக ஆட்சியில், சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தாலும், நிர்வாகச் சீர்கேடுகளாலும் கடந்த 11 ஆண்டு காலமாக முடிக்கப்படாமல் இழுபறியில் உள்ளது.

பல சாலைகள், பாதாளச் சாக்கடைக் கட்டுமானப் பணிகளுக்காகத் தாறுமாறாகத் தோண்டப்பட்டு, மிகவும் பழுதடைந்து, பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக, பயனற்ற வகையில் விபத்தை ஏற்படுத்தும் மரணக் குழிகளாக உள்ளன. மழைக்காலங்களில் இந்தச் சாலைகளில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாகக் காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

மேற்கண்ட அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டிய அரசுத்துறை, மக்களுக்கு முதல் தேவையான சுகாதார, அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் திட்டப் பணிகள் என்ற பெயரில் தேவையற்ற இடங்களில், மக்களின் வரிப்பணத்தை, பினாமி ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கி, அதில் முறைகேடுகள் செய்வதில் மட்டும்தான் முன்னுரிமை தந்து வருகிறது. இதற்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது மழைக்காலம் தொடங்கி இருப்பதால், பொதுமக்களின் அல்லல்கள் பெருக்கெடுத்துள்ளன. அதை மனதில் நிறுத்தியாவது கோவை மாநகராட்சி நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களைத் திரட்டி, மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.''

இவ்வாறு எம்எல்ஏ கார்த்திக் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x