Last Updated : 26 Nov, 2020 04:34 PM

 

Published : 26 Nov 2020 04:34 PM
Last Updated : 26 Nov 2020 04:34 PM

தூத்துக்குடியில் 8 மாத இடைவெளிக்கு பிறகு நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்: மக்காசோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித்து புகார்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுமார் 8 மாத இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்காசோளம் பயிரில் படைப்புழுத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை விவசாயிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் தோறும் மூன்றாவது வியாழக்கிழமை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த பிப்ரவரி 27-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் 8 மாத இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தனர். விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வேளாண்மை அலுவலகங்களில் இருந்து தங்கள் குறைகள், பிரச்சினைகளை காணொலி காட்சி வாயிலாக எடுத்துரைத்தனர். அவைகளுக்கு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய பதிலை அளித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பேசியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சி. மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 662 மி.மீ., ஆகும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 40 சதவீதம் குறைவாக 395 மி.மீ., அளவுக்கு தான் பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் இயல்பை விட 38 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. இன்னும் மழைக்காலம் இருப்பதால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஓரளவுக்கு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணைகளிலும் 80 சதவீதம் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே பாசனத்துக்கு பிரச்சினை ஏற்படாது என நம்புகிறோம்.

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. விவசாயிகள் அனைவரும் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். குறிப்பாக மக்காசோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதால் மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்மை துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர்.

தொடர்ந்து ஒவ்வொரு வட்டார வேளாண்மை அலுவலகங்களிலும் இருந்து விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். தூத்துக்குடி வட்டார வேளாண்மை அலுவலகத்தில் இருந்து பேசிய ஈஸ்வரமூர்த்தி என்ற விவசாயி, வடகிழக்கு பருவமழை தாமதம் காரணமாக பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் மக்காசோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதால் மருந்து அடிக்க வேளாண்மை துறையினர் உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர் பகுதி விவசாயிகளும் மக்காசோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் இருப்பதால், பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கவலை தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன், மக்காசோளம் பயிர்களை பொறுத்தவரை பிந்தைய பயிர்களில் தான் படைப்புழு தாக்குதல் உள்ளது. முதலில் பயிரிடப்பட்டு 40 நாட்களுக்கு மேல் வளர்ச்சியடைந்த பயிர்களில் தாக்குதல் இல்லை. மேலும், மருந்து அடிக்கப்பட்ட பயிர்களில் படைப்புழுத் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மருந்து அடிக்காத பயிர்களில் தான் தாக்குதல் காணப்படுகிறது. இதனை வயல் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளோம்.

எனவே, விவசாயிகள் அனைவரும் வேளாண்மை துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட மருந்தை வாங்கி அடிக்க வேண்டும். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டு வேளாண்மை துறையே மருந்து அடிக்கும் திட்டம் ஏதும் இல்லை. விவசாயிகள் மருந்தை வாங்கி அடிக்க வேண்டும். அதற்கான ரசீதை வட்டார வேளாண்மை அலுவலகத்தில் சமர்பித்தால் 50 சதவீத மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றார் அவர்.

நாசரேத்தை சேர்ந்த ராஜேந்திரன் பேசும்போது, தாமிரபரணி உபரிநீரை உப்பாறு, மலட்டாறு, கல்லாறு, வைப்பார் கொண்டு செல்லும் வகையில் தமிழக முதல்வர் கடந்த 11-ம் தேதி தூத்துக்குடியில் அறிவித்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த திட்டத்தால் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை நிலவும் தாமிரபரணி பாசன பகுதிகள் பாதிக்கப்படும் என அவர் கூறினார்.

இதேநேரத்தில் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த மல்லுச்சாமி உள்ளிட்ட ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் சிலர் முதல்வர் அறிவித்த இந்த திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்ததுடன், இந்த திட்டத்தால் வறட்சியான பகுதிகள் வளம் பெறும் என கூறினர். மேலும், இந்த திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், டிஏபி உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும். சீசனில் மட்டும் அல்லாமல் ஆண்டு முழுவதும் அரசு சார்பில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். பாசன கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கருமேணி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x