

தென்காசி மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி அணை, அடவிநயினார் அணை, கடனாநதி அணை, ராமநதி அணை ஆகியவற்றில் இருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
அதன்படி, தென்காசி மாவட்ட ஆட்சியல் சமீரன் முன்னிலையில், கருப்பாநதி அணையில் இருந்து அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி தண்ணீர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வாசுதேவநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருப்பாநதி பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள நேரடி கால்வாயின் மூலம் 9514.7 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெறும். இந்த அணையில் இருந்து 125 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் உள்ள 7 கிராம விவசாய நிலங்கள் பயன் பெறும்.
இதேபோல், அடவிநயினார் அணை பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள கால்வாயின் மூலம் 7643.15 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு 125 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும். கடனாநதி அணை பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் 9923.22 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 நாட்களுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது- இதன் மூலம் தென்காசி, அம்பாசமுத்திரம் வட்டத்தில் 12 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும். ராமநதி அணை பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் 4943.50 ஏக்கர் நேரடி பாசன நிலங்களுக்கு 125 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதன் மூலம் தென்காசி வட்டத்தில் 11 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெறும். நடப்பாண்டு பிசான சாகுபடிக்கு இன்று முதல் மார்ச் 30 வரை 125 நாட்களுக்கு இந்த 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதன் மூலம் தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை வட்டத்தில் உள்ள 42 கிராமங்களில் 32024.58 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் விவசாய பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெறுமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.