

கோமுகி அணையிலிருந்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 560.96 மில்லியன் கனஅடி. இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது.
கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்து வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தற்போது, நிவர் புயல் காரணமாகவும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கச்சிராயபாளையம், வடக்கனந்தல், கல்வராயன்மலை பகுதியில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அணைக்கான நீர் வரத்து இன்று (நவ. 26) காலை நிலவரப்படி, 560 கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம் 44 அடியாகவும், மொத்த நீர்ப்பிடிப்பு 489.56 மில்லியன் கன அடியை எட்டியுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தாலும், அணை முழுக் கொள்ளளவில் உள்ளது காண முடிகிறது. அணையின் பாதுகாப்புக் கருதி, வரத்து தண்ணீர் அப்படியே பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.