கடலூர் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மட்டிகள்: பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்

பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரையில் குவிந்திருந்த மட்டியைப் பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்
பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரையில் குவிந்திருந்த மட்டியைப் பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிக் குவிந்து கிடந்த மட்டிகளை (கடல் சிப்பி) பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

நிவர் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. புயல் எச்சரிக்கையாக கடற்கரை கிராமமான பரங்கிப்பேட்டை, சின்னூர், சாமியார்பேட்டை, புதுக்குப்பம், உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாகப் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு 2 நாட்களாக உணவு மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இன்று (நவ.26) காலை மாவட்டத்தில் மழை இல்லாமல் வெயில் அடித்தது. இந்த நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுப்பேட்டை கிராமக் கடற்கரைப் பகுதியில் ஏராளமான அளவுக்கு மட்டிகள் குவிந்து கிடந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மட்டி கிடக்கும் கடற்கரைப் பகுதிக்குச் சென்று சாக்கு மூட்டைகளிலும், பைகளிலும் அள்ளிச் சென்றனர். பெண்கள் பலர் நடந்தே சென்று பைகள் மற்றும் கூடைகளில் மட்டியை அள்ளிச் சென்றனர். இந்த மட்டி மருத்துவக் குணம் கொண்டது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், ''கடந்த 3 நாட்களாகக் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காற்றும், மழையும் பெய்ததால் கடலில் இருந்து மட்டிகள் கரை ஒதுங்கியுள்ளன'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in