வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிவர் புயல் தாக்கத்தால் நிதானமாக கொட்டித் தீர்த்த மழை: பாலாற்றின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வேலூர் அருகே நிவர் புயலால் சேதமடைந்த வாழை மரங்கள்.
வேலூர் அருகே நிவர் புயலால் சேதமடைந்த வாழை மரங்கள்.
Updated on
2 min read

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நிவர் புயலால் நேற்று இரவு தொடங்கி இன்று பகல் 12 மணி வரை மழை நிதானமாகக் கொட்டித் தீர்த்தது. இதனால், பாலாற்றின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி புதுச்சேரிக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையில் நேற்று (நவ.25) இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது. புயல் மெதுவாகக் கரையைக் கடக்க ஆரம்பித்ததால் வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மிதமான மழை பெய்தது.

வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் மீட்புப் பணியில் ஒருங்கிணைக்கப்பட்டனர்.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று (நவ. 26) காலை 8 மணிக்குப் பிறகு காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதுடன் பகல் 12 மணி வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.

மழையளவு

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி (மில்லி மீட்டரில்) குடியாத்தத்தில் 37.2, காட்பாடியில் 65.10, மேல்ஆலத்தூரில் 59.20, பொன்னையில் 56.60, வேலூரில் 81.50, அம்முண்டியில் 82.20, மோர்தானா அணை பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது.

மோர்தானா அணை ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் கவுன்டன்யா ஆற்றில் வெளியேற்றப்படும் நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையில் இருந்து 60 கன அடி வீதம் தண்ணீர் வெளியேறியது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அரக்கோணத்தில் 107.30, ஆற்காட்டில் 102, காவேரிப்பாக்கத்தில் 74, சோளிங்கரில் 96, வாலாஜாவில் 60.40, அம்மூரில் 81, கலவையில் 80.40 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. புயல் கடந்த நேரத்தில் மட்டும் வேலூர் மாவட்டத்தில் சராசரியாக 10 செ.மீ. மழையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மழைச் சேதம்

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி நிவர் புயலால் 5 குடிசைகள், 15 மரங்கள், 4 மின் கம்பங்கள், 36 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாளி செடிகள் முற்றிலும் சேதமடைந்தது தெரியவந்தது. சேத விவரங்களை வருவாய் மற்றும் வேளாண் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 குடிசைகள், 8 ஓட்டு வீடுகள் சேதமடைந்ததுடன் இரண்டு பசுக்கள், இரண்டு கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன. புயலால் 42 மரங்கள் முறிந்து விழுந்தன. ஆற்காடு அருகேயுள்ள புங்கனூர் பகுதியில் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன.

வேலூர் அருகே நாகநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.
வேலூர் அருகே நாகநதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் துணை ஆறுகளான அகரம் ஆறு மற்றும் பொன்னையாறு, கவுன்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அமிர்தி வனப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் நாகநதி ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாகச் சென்று செய்யாறு ஆற்றில் கலக்கும் நாகநதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் அகரம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கையும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.

தொடர் மழையால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் 15 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in