Published : 26 Nov 2020 02:49 PM
Last Updated : 26 Nov 2020 02:49 PM

நிவர் புயல் தாக்கம்; பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி இழப்பீடு வழங்குக: தினகரன்

நிவர் புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இதுவரை பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி இழப்பீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (நவ.25) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்குத் தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று (நவ. 26) அதிகாலை 2.30 மணி வரை நிவர் புயல் முழுவதுமாகக் கரையைக் கடந்தது.

இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "நிவர் புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இதுவரை பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி இழப்பீடு வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பேரிடர் பாதிப்பினால்தான் விவசாயிகள் நெல், வாழை, தென்னை போன்றவற்றுக்குப் பயிர்க் காப்பீடு செய்யவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தற்போது பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் பயன்பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

மேலும், மழையால் மூழ்கியுள்ள நெற்பயிரை மீட்டெடுப்பதற்கான சிறப்பு உதவிகளையும் வேளாண்மைத் துறையின் வழியாக பழனிசாமி அரசு விவசாயிகளுக்கு உடனடியாகச் செய்து தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x