

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 4 காவலர்களின் ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களை சாத்தான்குளம் போலீஸார் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை கொலை வழக்கில் சிபிஐ கைது செய்தது. இவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மதுரை மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கில் கைதான காவலர்கள் முருகன், வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், பல மாதங்களாக சிறையில் உள்ளோம். எங்கள் மீதான வழக்கில் சிபிஐ போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகமாட்டோம் எனக் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், தந்தை, மகனை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர் தான் தாக்கினர். மனுதாரர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.
இதையடுத்து, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டவர்கள் சட்டவிரோதமாக தாக்கப்படும் போது, மனுதாரர்களுக்கு சம்பந்தம் இல்லாத போது மனுதாரர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
சிபிஐ தரப்பில், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்யுள்ளது. விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்டு, மனுதாரர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.