

வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியினரின் பாரபட்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் கடந்த இரண்டு நாட்களாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கடலோரப் பகுதிகளில் மீனவர்களின் படகுகள் தூக்கி எறியப்பட்டுள்ளன. குடியிருப்புகளில் மீனவர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் குடிசை வீடுகளைச் சூறாவளிக் காற்று சூறையாடியிருக்கிறது. நகர்ப்புறங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பினால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஏனெனில், 2015இல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஒரே நேரத்தில் நீரைத் திறந்ததால் சென்னை நகரம் கடும் பாதிப்புக்கும், உயிரிழப்புகளுக்கும் உள்ளான சோக நிகழ்வை எவரும் மறந்திட இயலாது. இந்நிலையில் சென்னையின் பல பகுதிகள் வெள்ள நீரினால் மிதந்து வருகின்றன.
வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகளில் தமிழக அரசின் நிவாரணப் பணிகள் அனைத்து மக்களுக்கும் போய்ச்சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியினரின் பாரபட்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்ய வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது.
இந்தச் சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற வகையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள், காங்கிரஸ் முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நேரடியாகக் களத்தில் இறங்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கடும் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிற மக்களைத் துன்பத்தில் இருந்து மீட்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினரின் சேவையை நிவாரணப் பணிகள் மூலம் தீவிரப்படுத்தப்பட வேண்டுமென அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.