

தமிழீழப் போராட்டத்தில் பங்குபெற்று உயிர் நீத்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நவம்பர் 27 ஆம் தேதி மாவீரர் நாளாக நினைவுகூரப்படும் என்று 1989 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்தது.
அந்த நாளில்தான் விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் போராளியான சங்கர் என்ற சத்தியநாதன் வீர மரணம் அடைந்தார். ஈழத்தில் மட்டுமின்றி புலம்பெயர்த் தமிழர்கள் வாழ்கிற அனைத்து நாடுகளிலும் இந்நாள் நினைவுகூரப்படுவது வழக்கம்.
அன்றைய நாளில் ஈழத்திற்கான தேசியக் கொடியேற்றி, தமிழீழக் கனவை நனவாக்க அரும்பாடுபடுவேன் என்று உறுதிமொழி ஏற்கப்படும் என்பதால் அந்நிகழ்வைப் பொது இடங்களில் நடத்த இலங்கை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் அந்நாட்டின் உயரிய பொறுப்புக்கு வந்திருப்பதால், ஈழப்பகுதியில் இந்நிகழ்வை நடத்த தமிழ்த் தேசிய அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தாயக நேரப்படி நாளை மாலை 6.05 மணியளவில், மாவீரர்கள் நினைவாக மணி ஒலி எழுப்பப்படும். 6.06 மணியளவில் ஒரு நிமிட மவுன வணக்கம் செலுத்தப்படும். அடுத்து மக்கள் வீடுகளில் இருந்தபடியே தமிழ் மக்கள், மாவீரர்கள் நினைவாக ஈகைச்சுடர்களை ஏந்தி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழ்த் தேசியக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக 8 தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டமைப்பின் சார்பில், இலங்கை வடக்கு மகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கூறும்போது, ’’மாவீரர் நினைவு நாளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் போலீஸார் வழக்குத் தாக்கல் செய்து, தடை உத்தரவு பெற்றிருக்கிறார்கள். கூடவே தென் இலங்கையைப் போல, இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் கரோனா தொற்று தீவிரமாகியிருக்கிறது.
நம் மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் அனைவருக்கும் உள்ள சமூகப் பொறுப்பை நாம் உணர்ந்திருக்கிறோம். எனவே, நாளை (நவம்பர் 27 ஆம் தேதி) தமிழர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தவாறே ஈகைச்சுடரை ஏந்தி மாவீரர்களை நினைவு கூர்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று காரணமாகப் பொது நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் இந்தியா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் நடப்பது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.