Published : 26 Nov 2020 09:30 AM
Last Updated : 26 Nov 2020 09:30 AM

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது: நீர் திறப்பு 1500 கன அடியாக குறைப்பு

சென்னை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அதிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழை மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டியிருந்த பகுதிகளில் பெய்த 20 செ.மீ. மழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவிலான நீர் திறக்கப்பட்டதால் சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்தது.

வீடுகளில் சூழ்ந்த பெருவெள்ளம், உடமைகள் இழப்பு, பலருக்கு தங்கள் வாழ்நாள் சேமிப்பெல்லாம் இழக்கும் நிலை, உயிரிழப்பு என சென்னையின் வரலாற்றில் மிகுந்த பேரிடராக அமைந்தது. அதன் துக்கச் சுவடுகளை சென்னை மக்கள் யாரும் மறக்கவில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மழை, புயல் என வரும்போது சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் மிகுந்த கவலையுடனே பார்க்கிறார்கள்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து அதேபோன்று கனமழை, நிவர் புயல் காரணமாக சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யும் கனமழை பெய்தது.

24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 22 அடியைத் தொட்டது. இதனால் நேற்று பிற்பகல் ஏரி திறக்கப்பட்டு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

கனமழை நீர்வரத்து காரணமாக இன்று பிற்பகலிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை படிப்படியாக அதிகரித்தனர். வெளியேற்றப்படும் நீரின் அளவு பின்னர் 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.

பின்னர் இரவு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. 'நிவர்', கரையை இன்று அதிகாலை 2.30 மணியளவில் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல், படிப்படியாக வலுவிழந்து வருகிறது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு கணிசமாக குறைந்தது. இதனால் இன்று காலை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டது.


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5.000 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைவால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 10,000 கன அடியில் இருந்து 4,371 குறைந்துள்ளது. 24 அடி மொத்த கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 21.85 அடியாக உள்ளது. 19 மதகுகள் வழியாக நேற்று திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, தற்போது 5 கண்மதகுகளில் இரண்டில் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x