

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அதி தீவிர நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையை கடந்ததால் புதுச்சேரியில் அதிகளவாக 23 செ.மீ. மழை பொழிவால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலையெங்கும் மரங்கள் சாய்ந்துள்ளன. மின் இணைப்பு இல்லை. தொடர்ந்து மழைப்பொழிவும் உள்ளது.
நிவர் புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதன் ஒரு கட்டமாக 144 தடை உத்தரவு இன்று (நவ. 26) காலை வரை போடப்பட்டிருந்தது. நேற்றும், இன்றும் என 2 நாட்கள் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சாலைகள் பெரும்பாலும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
அத்தியாவசிய பணியில் இருந்த அரசு ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர். பேருந்து, டெம்போ, ஆட்டோ என பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தாழ்வான பகுதிகள், கடற்கரையோரம் வசித்த மக்களை அரசுப் பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
நேற்று இரவு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 5,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நகர பகுதியில் சுமார் 10 மணியளவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இரவில் நகர பகுதி முழுமையாக இருளில் மூழ்கியது.
சுமார் இரவு 11.30 மணியளவில் நிவர் புயல் புதுவை மரக்காணம் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது, கன மழையுடன் பலத்த காற்று வீசியது. கடலில் அலைகள் சுமார் 2 மீட்டர் அளவுக்கு உயர்ந்தது. ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த அலைகளால் கடற்கரையோர மீனவ கிராமங்களில் கடல்நீர் உட்புகுந்தது. நகரப்பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியது.
மழைநீர் உட்புகுந்த பகுதிகளில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றவும், அடைப்பு ஏற்பட்ட வாய்க்கால்களை சீரமைக்கும் பணியிலும் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். தொடர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய காற்றுடன் பலத்த மழை பெய்தது.
நகரெங்கும் தேங்கிய தண்ணீர்
புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன மழை காரணமாக புதுவையின் பெரியவாய்க்கால், சின்ன வாய்க்கால் ஆகியவை நிரம்பி ஆம்பூர்சாலை, செஞ்சி சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. நகரபகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியுள்ளது.
கிருஷ்ணாநகர், ரெயின்போநகர், ராஜராஜேஸ்வரி நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. முதல்வர் வீடுள்ள தெருவிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. கிராமப்புற பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளது.
புதுவை நகர பகுதியில் பல்வேறு சாலைகளில் மரங்கள் வேரோடு பெயர்ந்தும், கிளைகள் முறிந்து விழுந்தும் கிடந்தது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் அரசு துறை அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் ஆதரவாளர்களோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். தகுந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டதால் உயிர்சேதம் புதுவையில் ஏற்படவில்லை.
ஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்துறை அதிகாரிகள் மின் வயர்கள் சேதத்தைக் கண்டறிந்து சீர்ப்படுத்தி வருகின்றனர். இதனால் மின் இணைப்பு வழங்கவில்லை.
நேற்று இரவு 11 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல் இன்று அதிகாலை 4 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. ஆனாலும் தொடர்ந்து காற்று வீசி வருகிறது. மழையும் பெய்து வருகிறது. இன்றும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை சாலையில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.