

புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்த நிவர் புயல் வலுவிழந்து வடக்கு மற்றும் வடமேற்காக நகர்ந்து சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிரப் புயலாக மாறியது. நேற்று இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே நேற்று இரவு 11.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுச்சேரிக்கு வடக்கே இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்டது.
இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. நிவர் தீவிரப் புயல் கரையைக் கடந்த நிலையில் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணிக்குள் கடலூரில் 22 செ.மீ மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் 18.7 செ.மீ மழையும், காரைக்காலில் 8.4 செ.மீ மழையும், சென்னையில் 8.9 செ.மீ மழையும், நாகையில் 6.2 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல் கரையை கடந்துள்ளது. பின்னர் அதுமேலும் வலுவிழந்தது. சூறவாளியாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரையை கடந்த போது 120 முதல் 135 கிலோ மீட்டர் வேகம் இருந்த நிலையில் அதன் வேகம் பின்னர் 100 கிலோ மீட்டர் என்ற அளவில் குறைந்தது.
புயலின் வேகம் குறைந்தாலும் அது செல்லும் வழியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை முதல் தீவிர கனமழை பெய்து வருகிறது.