Published : 26 Nov 2020 03:16 AM
Last Updated : 26 Nov 2020 03:16 AM

தமிழகம் முழுவதும் ரயில், பேருந்து போக்குவரத்து 2-வது நாளாக ரத்து

தமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் 2-வது நாளாக நேற்றும் நிறுத்திவைக்கப்பட்டன.

இதேபோல், தெற்கு ரயில்வேயும் 2-வது நாளாக பல்வேறு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது. பல்வேறு வழித்தடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், சென்னையில் நேற்று காலை 10 மணி வரை மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால், மின்சார ரயில்கள், ரயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி - நிஜாமுதீன் (06011) நேற்றை ரயில் சேவையும், காரைக்குடி - சென்னை எழும்பூர் (02606), மதுரை - சென்னை எழும்பூர் (02636/02635), சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி (06795/06796) ஆகிய ரயில்களின் இன்றைய சேவை ரத்து செய்யப்படுகிறது. நிஜாமுதீன் - கன்னியாகுமரி (06012) 28-ம் தேதி சேவை ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் (02624) உட்பட 3 சிறப்பு ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு சேலம், ஈரோட்டில் இருந்து இயக்கப்பட்டன.

இதேபோல், மைசூர் - மயிலாடுதுறை (06232/06231), எர்ணாகுளம் - காரைக்கால் (06188/06187), கோயம்புத்தூர் - மயிலாடுதுறை (02083/02083) ஆகிய ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு இன்றும் நாளையும் திருச்சியில் இருந்து இயக்கப்படுகின்றன. கேஎஸ்ஆர் பெங்களூர் - சென்னை சென்ட்ரல் (02658/02657) சிறப்பு ரயில்களின் சேவை நேற்றும் இன்றும் ரத்து செய்யப்படுகிறது.

இன்று 12 ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்(02675/02676), சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் (06027/06028), சென்னை சென்ட்ரல் - பெங்களூர் (06075/06076), கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் (02680/02679), பெங்களூர் - சென்னை சென்ட்ரல் (02608/02607), சென்னை சென்ட்ரல் - திருப்பதி (06057/06008) ஆகிய சிறப்பு ரயில்களின் இன்றைய சேவை ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x