Published : 26 Nov 2020 03:16 AM
Last Updated : 26 Nov 2020 03:16 AM

அரசு நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றிய 33 நூலகர்களுக்கு ‘எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது’- முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை

அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியதற்காக 33 நூலகர்களுக்கு ‘டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை’ முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது நூலகங்களில், நூல்களையும் வாசகர்களையும் இணைக்கும் பணியை மேற்கொண்டு வரும் நூலகர்களை கவுரவிக்கவும், நூலகர்களின் பணியை ஊக்குவிக்கவும், நவம்பர் மாதம் நடைபெறும் நூலக வார விழாவில், சிறப்பான சேவையாற்றும் நூலகர்களுக்கு ‘நல்நூலகர் விருது’ வழங்கப்படுகிறது.

இந்த விருது கடந்த 2012-ம் ஆண்டு முதல், இந்திய நூலகத் தந்தையாக டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியதற்காக 2020-ம் ஆண்டுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதுக்கு, ந.செசிராபூ (அரியலூர்), த.கோமதி (சென்னை), இரா.தாமோதரன் (கோயம்புத்தூர்), மு.அருள்ஜோதி (கடலூர்), சொ.ஆதிரை (தருமபுரி), வே.பாஸ்கர் (திண்டுக்கல்), கு.சதாசிவம் (ஈரோடு), தி.சுந்தரமூர்த்தி (காஞ்சிபுரம்), செ.ஜெரால்டு (கன்னியாகுமரி), ப. மணிமேகலை (கரூர்), சி.பழனி (கிருஷ்ணகிரி), அ.சுப்பிரமணியன் (மதுரை), கோ.நாகராஜன் (நாகப்பட்டினம்), சு.சந்துரு (நாமக்கல்), வெ.அறிவழகன் (நீலகிரி), அ.தில்ஷாத் (பெரம்பலூர்), மா.துரைராஜ் (புதுக்கோட்டை), உ.நாகேந்திரன் (ராமநாதபுரம்), மா.சந்தோசம் (சேலம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், வீ.சூரசங்கரன் (சிவகங்கை), வை.ச.பழனிவேல் (தஞ்சாவூர்), வெ.பால்ராஜ் (தேனி), அ.தனலெட்சுமி (திருச்சிராப்பள்ளி), மா.இரவிச்சந்திரன் (திருநெல்வேலி), எஸ்.தங்கவேல் (திருப்பூர்), ச.ஞானப்பிரகாசம் (திருவள்ளூர்), சி.சிவசங்கரன் (திருவண்ணாமலை), ஜெ.குமாரி (திருவாரூர்), மு.பொன்ராதா (தூத்துக்குடி),க.வேலு (வேலூர்), கோ.தனுசு (விழுப்புரம்), சி.வெள்ளைச்சாமி (விருதுநகர்), எம்.தமிழ்மணி (சென்னை, கன்னிமாரா பொது நூலகம்) ஆகிய 33 நூலகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுகளை வழங்கும் அடையாளமாக 5 நூலகர்களுக்கு அரங்கநாதன் விருதுக்கான சான்றிதழ்கள், தலா 50 கிராம் வெள்ளிப்பதக்கங்கள், தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலர் கே.சண்முகம், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் தீரஜ்குமார் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x