Published : 22 Oct 2015 04:00 PM
Last Updated : 22 Oct 2015 04:00 PM

இலங்கை போர்க்குற்றம்: பன்னாட்டு நீதிவிசாரணை தான் ஒரே தீர்வு- ராமதாஸ்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மை தான் என்று அது குறித்து விசாரிப்பதற்காக அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட குழு கூறியுள்ளதையடுத்து பன்னாட்டு நீதிவிசாரணைதான் ஒரே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நடைபெற்றது உண்மை தான் என்று அது குறித்து விசாரிப்பதற்காக அந்நாட்டு அரசால் அமைக்கப்பட்ட குழு கூறியிருக்கிறது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகளை ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக் குழு ஏற்கனவே உறுதி செய்திருந்தாலும் இலங்கை அரசின் குழுவே அதை ஒப்புக்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இலங்கைப் போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்ற புகார்கள் குறித்து விசாரிக்க கொழும்பு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய அதிபர் மகிந்த இராஜபக்சே அமைத்திருந்தார். அக்குழுவின் அறிக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று முன்நாள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தான் சிங்களப்படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

‘‘இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்களப்படையினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது உண்மை தான். சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை சிங்களப்படையினர் கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்வது போல சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ உண்மையானது தான். இலங்கைப் போரின் முடிவில் சரணடைவதற்காக வெள்ளைக்கொடியேந்தி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த குற்றச்சாற்றுக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதால் அதுபற்றி நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுக்கள் குறித்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி பரணகம குழு பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், இறுதிகட்ட போரில், ஐ.நா கூறியதைப் போல 40,000 தமிழர்கள் கொல்லப்படவில்லை; இலங்கையில் இனப்படுகொலை நடத்தப்படவில்லை என்ற அக்குழு கூறியிருப்பதை ஏற்க முடியாது. இக்குழுவின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் புதியவை அல்ல... ஏற்கனவே பல அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டவை தான் என்றாலும், அவற்றில் பெரும்பாலானவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில், போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிராகரிப்பதற்காக இந்த விசாரணை அறிக்கை பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இந்த அறிக்கையை காரணம் காட்டி‘‘இலங்கையில் போர்க்குற்றங்கள் நடந்ததை அரசின் விசாரணைக்குழு உறுதி செய்திருப்பதிலிருந்து அதன் நடுநிலையை உணரலாம். அதேபோல் போர்க்குற்றங்கள் குறித்த நீதி விசாரணையையும் இலங்கை நேர்மையாகவும், நடுநிலையாகவும் நடத்தும்’’ என்று உலக அரங்கில் இலங்கை வாதிடலாம். இந்த ஐயத்தை உறுதி செய்யும் வகையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிபர் சிறிசேனா மீண்டும் கூறியிருக்கிறார்.

சிங்களப்படையினரின் போர்க்குற்றங்களை உறுதி செய்யும் வகையில் இன்னும் எத்தனை ஆதாரங்கள் வெளிவந்தாலும், இலங்கையின் நிலைப்பாட்டில் அது சாதகமான மாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்தாது என்பது தான் உண்மை. இன்னும் கேட்டால், போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய இலங்கை நீதிமன்றம் விசாரணை நடத்தும் என ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஒப்புக் கொண்ட இலங்கை அரசு, அதிலிருந்து பின்வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகத் தான் போர்க்குற்றங்கள் குறித்த நீதிமன்ற விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அதிபர் சிறிசேனா கூட்டியிருக்கிறார்.

அடுத்தக் கட்டமாக இலங்கை மதத் தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தவுள்ளார். போர்க்குற்றங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்துவதற்கோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கோ அவர்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டுமானால், அதற்கு பன்னாட்டு நீதிமன்ற விசாரணை மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும். எனவே, இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x