Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த ‘சிட்பி’ வங்கியுடன் தொழில் வணிகத் துறை ஒப்பந்தம்: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த, முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தொழில் வணிகத் துறை - இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் திரள் வளர்ச்சி நிதியைப் பயன்படுத்தி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் வகையில், தொழில் வணிகத் துறைக்கும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கும் (SIDBI) இடையே முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறு, சிறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின்வளர்ச்சிக்கு தக்க சூழலை உருவாக்கும் வகையில் 3 ஆண்டுக்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டை உள்ளடக்கியதாகும்.

இதன்மூலம், நிதியுதவி தேவைப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன்வசதி அளிப்பதற்கு ‘எஸ்ஐடிபிஐ’ திரள் வளர்ச்சி நிதியை பயன்படுத்திட இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி உதவும். இதனால், மாநிலம் முழுவதும் குறு நிதி வழங்கவும், மாநிலத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரிக்கவும் இயலும்.

மேலும், தொழில்நுட்ப பரிமாற்றம், புதுமைகளை மேம்படுத்துதல், அறிவுசார் சொத்துரிமை, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவை மூலம் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போட்டியிடத்தக்க வகையில், குறைந்த உற்பத்தி செலவில் தரம் உயர்த்தப்பட்ட புதுமையான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ்

சென்னை கிண்டியில் உள்ள தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சென்னை கிண்டி,தொழில் வணிகத் துறையின் மண்டல இணை இயக்குநர் அலுவலகம், கோயம்புத்தூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகம், மதுரை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களுக்கு ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் வழங்குவது, மானியம், சலுகைகளை எளிதாக பெறுவது, தொழில் கூட்டுறவு சங்கங்களின் பதிவு ஆகிய சேவைகளை எளிதாக்குவது போன்ற சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த சான்றிதழை முதல்வர் பழனிசாமியிடம் ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், சிறு குறு தொழில்கள் துறை செயலர் கே.கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x