

‘நிவர்’ புயலின் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்துவருவதை அடுத்து, இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பள்ளிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த அக்.8-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கின. சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு, அதன்படி வகுப்புகள் இயங்கின.
இந்நிலையில், புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகுப்புகள், இதர ஆன்லைன் வகுப்புகளுக்கு கடந்த நவ.24, 25-ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில், “நிவர் புயல் தாக்கம் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நவ.26 முதல் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
புயல் கரையை கடந்த பின்னர் தொடர் மழை, மின்சாரம் துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில்கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பொது விடுமுறை
இன்று பொது விடுமுறை புயல், கனமழை பாதிப்பைத் தொடர்ந்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் புதுச்சேரி, காரைக்காலுக்கு இன்றும் (நவ.26) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பு செயலர் ஹிரன் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். இதற்கு மாற்று பணி நாளாக வரும் டிச.19-ம் தேதி பணிபுரிய வேண்டும் என்றும் அத்தியாவசிய பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை, கரோனா பணிகளில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.