

காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் ‘நிவர்’ புயலின் காரணமாக இன்னும் ஊர் திரும்பவில்லை, சிலரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை என மீனவர்கள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை வரை 10 படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என காரைக்கால் மாவட்ட மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 192 மீன்பிடி விசைப் படகுகளில், 102 படகுகள் பாதுகாப்பாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தன. 67 மீன்பிடி படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றடைந்தன. 23 மீன்பிடி படகுகள் மட்டுமே கரை திரும்ப வேண்டியிருந்தது.
இன்று(நேற்று) காலை நிலவரப்படி அதில் 7 படகுகள் ஆங்காங்கே கரை திரும்பிய நிலையில், மீதமுள்ள 16 படகுகளில் 14 படகுகள் காரைக்கால் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எஞ்சிய 2 படகுகளில் சென்ற 32 மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாகை மீனவர்கள்: நாகை துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற அக்கரைப்பேட்டை, கீச்சாம்குப்பம், கல்லார் ஆகிய பகுதிகளை சேர்ந்த 110 மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கரை திரும்பவில்லை. இந்நிலையில், 11 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 110 பேரும் நேற்று காலை பத்திரமாக நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.