

திருப்பூரை சேர்ந்த தையல் தொழிலாளி எழுதிய நாவலுக்கு அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர் ஆ.சிவராஜ் (50) தையல் தொழிலாளி. இவரது மனைவி தேவி. சிறுவயது முதலே கதை எழுதும் பழக்கமுடையவர் சிவராஜ். இவர் எழுதிய ‘சின்னானும் ஒரு குருக்கள்தான்’ நாவலுக்கு, தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இதுதொடர்பாக எழுத்தாளர் சிவராஜ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது: சிறு வயது முதலே வாசிப்பும், எழுத்தும் என் வாழ்வோடு கலந்துவிட்டது. பழநியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப்படிப்பு முடித்துள்ளேன். திண்டுக்கல் மாவட்டம்பழநி கள்ளிமந்தயம் அருகே உள்ளகுப்பாயவலசு சொந்த ஊர். திருமணமாகி, பிழைப்புக்காக திருப்பூர் வந்தேன். ‘சின்னானும் ஒரு குருக்கள் தான்’ என்ற தலைப்பில் நான்எழுதிய நாவலில், ஒரு கிராமத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை கதைமாந்தர்களாக்கினேன். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தஇளைஞர், கோயில் அர்ச்சகராவதும், அதனைத் தொடர்ந்து ஊரில் ஏற்படும் விஷயங்களையும் கதையாக்கினேன். சொந்த கிராமத்தில் தங்கி 3 ஆண்டுகள் நாவல் எழுதினேன்.
நாவல் முழுமையாக எழுதிய பிறகே, திருப்பூர் திரும்பினேன்.அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை அரசு சட்டமாக இயற்றி உள்ளது. ஆனால் கிராமங்களில் கள யதார்த்த நிலை வேறு மாதிரியாக உள்ளது. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை இந்த நாவலில் பதிவு செய்துள்ளேன். வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம் சிறந்த நாவலாக தேர்ந்தெடுத்து, கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற விழாவில் என்னை கவுரவித்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வின்குமார், மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஆகியோர் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினர். தற்போது தமிழகத்தில் 8 பேர், எம்.ஃபில் (ஆய்வியல் நிறைஞர்) பட்டத்துக்காக என் நாவலை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.