Published : 26 Nov 2020 03:17 AM
Last Updated : 26 Nov 2020 03:17 AM

மாமல்லபுரம் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை: மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் முடக்கம்

மாமல்லபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் நிவர்புயல் காரணமாக கனமழை பெய்ததால் தாழ்வான குடியிருப்புகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. மேலும், மின்சாரம்துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான திருப்போரூர். கோவளம், கேளம்பாக்கம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கடப்பாக்கம் மற்றும் கூவத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கனமழை கொட்டியது. மேலும், பிற்பகலுக்கு மேல் பலத்தகாற்றுடன் கனமழை பெய்ததால் கிழக்கு கடற்கரை சாலை, பழையமகாபலிபுர சாலை மற்றும் கேளம்பாக்கம்- கோவளம் செல்லும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

கேளம்பாக்கம் அடுத்த ஜோதிநகரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் சமாதானம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு, ஐந்துகாணி ஆகிய பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இருளர் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.

மாமல்லபுரத்தில் நிவர் புயல் கரையை கடக்க கூடும் என்பதால் தேவையான மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்காக வடக்கு மண்டல ஐஜி.நாகராஜ், டிஐஜி.சாமுண்டீஸ்வரி மற்றும் எஸ்பி.கண்ணன் ஆகியோர் மாமல்லபுரத்தில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து ஆங்காங்கே தடுப்புகளை அமைத்தனர். இதுதவிர, மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக தயார் நிலையில் உள்ள போலீஸார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோரிடம் ஆலோசனையில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளுக்காக ஜேசிபி இயந்திரம், குடிநீர் லாரிகள் ஆகியவை தயார் நிலையில் உள்ளதா என ஆய்வு செய்தனர்.

இதுதவிர புயலால் மின்கம்பங்கள் சேதமடைந்தால் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு கோட்டம் சார்பில் 2,500 மின்வாரிய பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x