கடலூர் மாவட்டத்தில் மீட்பு பணிக்காக பிற மாவட்டங்களில் இருந்து 300 மின் ஊழியர்கள் வருகை: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
கடலூர் மாவட்டத்தில் மீட்புப் பணிக்காக, பிற மாவட்டங்களில் இருந்து 300 மின் ஊழியர்கள் வந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கடலூர் தேவனாம்பட்டினம் புயல் பாதுகாப்பு மையத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அரிசி,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதா என அமைச்சர் கேட்டறிந்தார். சமூக இடைவெளியை கடை பிடித்து பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா என அவர் ஆய்வு செய்தார். உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என அவர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அனைவரும் பாதுகாப்பாக மையத்தில் தங்கியிருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:
தங்கும் மையங்களில் தேவையான கிருமிநாசினிகள், முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களிலிருந்து 300 மின் ஊழியர்கள் தற்போது கடலூர் மாவட்டத்திற்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள வந்துள்ளனர். தேவைக்கேற்ப பல்வேறு மாவட்டங்களிலிருந்து மின் ஊழியர்கள் கடலூர் மாவட்டத்திற்கு வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வர். மரங்கள் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையை, 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் 04142-220700, 233933, 221383, 221113 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல், கடலூர் கோட் டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04142-231284, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 04144 222256, 290037, விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை04143-260248 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி,கடலூர் வட்டாட்சியர் பலராமன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
