

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 84-வது பிறந்த தினமான நேற்று தமிழகம் முழுவதும் ‘இளைஞர் எழுச்சி நாள்’ கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் உட்பட பல் வேறு இடங்களில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கடந்த ஜூலை 27-ம் தேதி காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 15-ம் தேதி தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ‘இளைஞர் எழுச்சி நாளாக’ கொண்டாடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கலாம் பிறந்த நாளான நேற்று தமிழகம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
கிண்டி ஆளுநர் மாளிகையில் கலாம் படத்துக்கு ஆளுநர் கே.ரோசய்யா, ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழத்தின் பல்கலை தொழில் கூட்டு மைய (சியுஐசி) அரங்கில் தமிழக அரசு சார்பில் விழா நடந்தது. பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் பரிசு வழங்கினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
அமைச்சர் பங்கேற்பு
சென்னை ஆதம்பாக்கம் கிளை நூலகத்தில் நடந்த புத்தக கண் காட்சியை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டிகேஎம் சின்னையா தொடங்கிவைத்தார். இதில் 50 ஆயிரம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு 20 சதவீதம், மற்றவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் இளைஞர் எழுச்சி நாள் பேரணியை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள், ராணிமேரி, எஸ்எஸ்எஸ் ஜெயின் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சென்னை பிர்லா கோளரங்கில் விண்வெளியியல் குறித்து விஞ்ஞானிகள் உரையாற்றினர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள எம்சிசி பள்ளி வளாகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. தி.நகர் தருமை ஆதீன பிரச்சார சபா அரங்கில் நடந்த கவிதாஞ்சலி நிகழ்ச்சியில் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாம்பலம் ஆ.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடந்த கவியரங்கில் பல்கலைக்கழக வேந்தர் பாரிவேந்தர் பங்கேற்றார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறை பேராசிரியர் பத்மா ரவீந்திரன் பங்கேற்றார்.
சென்னை அரசு அருங்காட்சி யகத்தில் ‘நாளைய இந்தியா’ அமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடந்தது. சவுகார்பேட்டை காசிசெட்டி தெருவில் நடத்தப்பட்ட கலாம் புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள், குழந்தை கள் ஆர்வத்துடன் பார்வையிட்ட னர்.
இது மட்டுமின்றி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல இடங்களில் சாலையோரம் கலாம் படம் வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
தலைவர்கள் மரியாதை
தி.நகரில் ‘கமலாலயம்’ பாஜக அலுவலகத்தில் கலாம் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அசோக் நகரில் இந்திய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கலாம் படத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன் மாலை அணிவித்தார். அசோக் நகரில் பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலகத்தில் கலாம் படத்துக்கு கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.