

வங்க கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் நேற்று இடைவிடாமல் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களிலிருந்து பொதுமக்கள் யாரும் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை போன்ற நகரங்களுக்கு வரவில்லை.
மேலும், நகரங்களில் வணிக நிறுவனங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. ஒருசில தேநீர் கடைகள், உணவகங்கள், பெட்டிக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
புயல் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், பொதுமக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கினர். மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
முறிந்து விழுந்த மரங்கள்
மழையுடன் அவ்வப்போது காற்றும் வீசியதால், பாபநாசம் அருகே நல்லூர் வாழைப்பழக்கடை என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அகற்றினர்.
கும்பகோணம் பகுதியில் சாலையோரங்களில் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயந்திரத்தின் உதவியுடன் வெட்டி அகற்றினர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில்...
நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கடல் சீற்றம் கடுமையாக காணப்படுவதால் மீன்வளத் துறையினர் மீனவர்களை பாதுகாப்புடன் இருக்க தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மீனவ கிராமங்களில் தண்டோரா மற்றும் மைக் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க பஞ்சாயத்தார் ஏற்பாடு செய்துள்ளனர்.
மழை மற்றும் காற்று வீசுவதை பொறுத்து மின்துறையினர் மின் விநியோகத்தை அவ்வப்போது நிறுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து, பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளானது.
காரைக்கால் மாவட்டத்தில்...
‘நிவர்’ புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, திருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் நேற்று காலை 10 மணி முதல் இன்று (நவ.26) காலை 6 மணி வரை 144 தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அத்தியாவசியப் பணிகள் தவிர்த்த மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பேருந்து போக்குவரத்தும் இல்லை. இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காரைக்கால் எம்.எம்.ஜி நகர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் பலத்த காற்றால் மரங்கள் விழுந்தன. காரைக்காலுக்கு வந்துள்ள 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டனர். காரைக்கால் ஆட்சியர் அர்ஜூன் சர்மா, திருமலைராயன்பட்டினத்தில் உள்ள தடுப்பணை, தனியார் கப்பல் துறைமுகம், வாஞ்சூர், காளிகுப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகாபட், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மீன் வளத்துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை. மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.