Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைப்பு: அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

‘நிவர்’ புயல் காரணமாக, வேலூர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் தாழ்வானப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்புடன் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகளை நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். அருகில், கோட்டாட்சியர் கணேஷ், மாநகராட்சி ஆணையர் சங்கரன், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர். அடுத்த படம்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ். கடைசிப் படம்: திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை ஆய்வு செய்த எஸ்பி விஜயகுமார். அருகில், வட்டாட்சியர் மோகன், நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் உள்ளிட்டோர்.

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் காரணமாக சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

‘நிவர்’ புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறி வித்தது. இதைத்தொடர்ந்து, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் ‘நிவர்’ புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முதல் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலூர் மாநகரில் கனமழை பெய்தால் முதலில் பாதிக்கப் படக்கூடிய இடங்களான கன்சால்பேட்டை, திடீர் நகர், முள்ளிப்பாளையம், கொண வட்டம், பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ் தலை மையில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

வேலூர் - பெங்களூரு சாலையில் உள்ள நிக்கல்சன் கால்வாய் ‘பொக்லைன்’ கொண்டு நேற்று தூர்வாரப்பட்டது. மேலும், கனமழையால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களை தங்க வைக்க கொண வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 50 கிராமங்களில் நிவாரண முகாம் தயார் நிலையில் இருப்பதாகவும், முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாக வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் தெரிவித்தார்.

இதற்கிடையே, சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின் பேரில், 1 மற்றும் 2-வது மண்டலங்களில் பொது இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகள், மேற் கூரை ஒகளை மாநகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று அகற்றினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்டங்களில் பல்வேறு இடங் களில் முகாம்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதில், 5,000-க்கும் மேற் பட்டோர் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.

ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், கலவை மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதி களில் தாழ்வான மற்றும் பழுத டைந்த வீடுகளில் வசிப்போர், குடிசை வீடுகள் மற்றும் சாலை யோரங்களில் வசிப்போர் அடை யாளம் காணப்பட்டு அவர்கள் பத்திர மாக மீட்கப்பட்டு நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு அதி காரிகள் செய்து வருகின்றனர்.

ஆற்காடு வட்டத்துக்கு உட்பட்ட புன்னப்பாடி கிராமத்தில் நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதே போல, ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் பல்வேறு முகாம்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் வந்தால் முதலில் பாதிக்கப்படக்கூடிய சிவராஜ்பேட்டை, ஆதியூர், ஆண்டியப்பனூர், மரிமானிக் குப்பம், தாதவள்ளி ஆகிய பகுதிகளில் எஸ்பி விஜயகுமார், சார் ஆட்சியர் வந்தனாகர்க், திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல, ஆம்பூர், வாணியம்பாடி, நாட் றாம்பள்ளி, கந்திலி மற்றும் ஜோலார்பேட்டை போன்ற பகுதி களிலும் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் ‘நிவர்’ புயல் காரணமாக சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக 3 மாவட்டங்களில் 2 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x