நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கத் தொடங்கியது: அதிகாலை வரை கரையைக் கடக்கும்

நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கத் தொடங்கியது: அதிகாலை வரை கரையைக் கடக்கும்
Updated on
1 min read

கடலூர், புதுவை அருகே நெருங்கி வரும் அதி தீவிர நிவர் புயல் இரவு 11 மணிக்கு மேல் கரையைக் கடக்கத் தொடங்கியது. புதுவை- மரக்காணம் இடையே புயல் கரையைக் கடக்கிறது.

அதி தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) இரவு 10 மணி அளவில் நிவர் புயல் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 55 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 130 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

பின்னர் அது நகர்ந்து புதுவைக்கு வடக்கே இன்று இரவு 11 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. புயலின் ஆரம்பப் பகுதி கடக்கத் தொடங்கியுள்ளது. மையப் பகுதி நள்ளிரவில் கடக்கும் எனத் தெரிகிறது. தற்போதைய வேகம் 16 கி.மீ. ஆக உள்ளது. புயலின் கண் பகுதி முழுவதுமாகக் கடக்க அதிகாலை 3 மணி ஆகிவிடும். புதுவை மற்றும் மரக்காணம் இடையே புயல் கரையைக் கடக்கிறது.

கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். புயல் கரையைக் கடக்கக் கடக்க மழையும் குறைந்துவிடும். சென்னையைப் பொறுத்தவரை கனமழை முதல் மிக கனமழை உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையைக் கடக்கும் சமயத்தில் 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலத்த காற்றானது புதுவை, காரைக்கால், நாகை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 140 கி.மீ. வேகத்திலும், சமயத்தில் 155 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என ஏற்கெனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதேபோன்று திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் வீசும். சமயங்களில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும், புயல் கரையைக் கடப்பதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிவர் அதி தீவிரப் புயல் கரையைக் கடக்க ஆரம்பித்துள்ள நிலையில் புதுவை மற்றும் கடலூர் பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் நகரம் மற்றும் புதுவையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்த பின்பு ஆய்வு செய்து மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in