

நீட் தேர்வெழுதிய அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், ஆளுநரின் முடிவுக்குக் காத்திருக்காமல் தமிழக அரசு விரைவில் முடிவெடுத்தது போல், ஏழு பேர் விடுதலையிலும் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜிவ்காந்தி கொலைக் கைதி ரவிச்சந்திரன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 29 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
7 முதல் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருந்த பலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அரசியல் தலையீடு காரணமாக, என்னை விடுதலை செய்யவில்லை. தொடர்ந்து சிறையில் இருப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டு எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி 22 மாதங்கள் முடிந்து விட்டன.
தமிழக சிறையில் உள்ள 1,600 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழு பேர் விடுதலை தொடர்பான பேரவைத் தீர்மானம் மீது இதுவரை முடிவெடுக்கவில்லை. எனவே, தொடர்ந்து 29 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஏழு பேர் விடுதலை தொடர்பான முடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காக உள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதே கோரிக்கையுடன் நளினி தாக்கல் செய்த மனுவும் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல ரவிச்சந்திரனின் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிடுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் அரசு விரைவில் முடிவெடுத்தது. இதையடுத்து ஆளுநரும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இதேபோல் ரவிச்சந்திரன் உட்பட ஏழு பேர் விடுதலை விவகாரத்திலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பின்னர், மனு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.