Last Updated : 25 Nov, 2020 07:43 PM

 

Published : 25 Nov 2020 07:43 PM
Last Updated : 25 Nov 2020 07:43 PM

தேவையெனில் மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்: ஆய்வுக்குப் பின் கிரண்பேடி தகவல்

கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேரிடர் மையத்தில் அதிகாரிகளிடம் உரையாடிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

புதுச்சேரி

புதுவையில் மீட்புப் பணிகளுக்கு, கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சென்னை விமானப் படை மையத்தில் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அதனைப் புதுவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆய்வுக்குப் பின்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

நிவர் புயலையொட்டி புதுவை அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், தொகுதிதோறும் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் இரு நாட்களாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து ஆய்வுப் பணிகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மாதம் ஆன்லைனில் குறைதீர் கூட்டத்தைத் தொடங்கினார். இந்த நிலையில் இன்று பிற்பகலில் ராஜ்நிவாஸிலிருந்து புறப்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கனகசெட்டிகுளம், வைத்திக்குப்பம் கடற்கரைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மீனவ மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கேட்டறிந்தார்.

அங்கிருந்து புறப்பட்ட கிரண்பேடி, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பேரிடர் மையத்திற்கு சென்றார். அங்கு இருந்த அதிகாரிகளிடம் புதுவையில் நிவர் புயலை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து கிரண்பேடி வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவல்:

’’புதுவையில் மீட்புப் பணிகளுக்கு, கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சென்னை விமானப் படை மையத்தில் தயார் நிலையில் உள்ளது. புதுவைக்குத் தேவைப்பட்டால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நகர் முழுவதும் கடைகள், மார்க்கெட் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வது நல்ல பலனைத் தரும்.’’

இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x