போலீஸார் முன் பெண் தற்கொலை செய்தது குறித்து நீதி விசாரணை: எதிர்க்கட்சிகள், அமைப்புகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் போலீஸார் முன்னிலையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக சங்கரபாண்டியன் (காங்கிரஸ்), கே.ஜி. பாஸ்கரன் (மார்க்சிஸ்ட் கம்யூ.), எஸ். காசிவிஸ்வநாதன் (இ.கம்யூ), கே.எம்.ஏ. நிஜாம் (மதிமுக), கே.எஸ். ரசூல் மைதீன்( தமுமுக) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் சகுந்தலா (44) என்ற பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 24-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சகுந்தலா வீட்டுக்கு வந்த சுத்தமல்லி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள், அவரது இரண்டாவது மகனை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி அடித்து இழுத்து சென்றுள்ளார்கள்.
அதன்பின் அதிகாலை 3 மணியளவில் சகுந்தலாவின் மூத்த மகனையும் அடித்து இழுத்துள்ளார்கள். மகனை ஏன் அழைத்து செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு சகுந்தலாவையும் போலீஸார் அடித்துள்ளனர். மேலும் சுத்தமல்லியில் சகுந்தலாவின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரர் பாலசுந்தரம் வீட்டுக்கு சென்றும் போலீஸார் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் சகுந்தலா தன் வீட்டில் தீயில் கருகி இறந்துள்ளார். சகுந்தலாவை காப்பாற்ற முயற்சித்தவர்களையும் போலீஸார் மிரட்டி தடுத்துவிட்டனர். தற்போது சகுந்தலா தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் அவரது மகனிடமும், சகோதரரிடமும் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர். மேலும் அவசர அவசரமாக சுடுகாட்டுக்கு கொண்டு சென்று சகுந்தலாவின் உடலை எரித்துவிட்டனர்.
சகுந்தலா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையானவர் கிடையாது என்று அவரது தாயார் கூறுகிறார். காவல்துறையினர் இரவு நேரத்தில் அத்துமீறி அடித்து துன்புறுத்தியதில் சகுந்தலா இறந்துள்ளார்.
சகுந்தலாவின் சாவுக்கு சுத்தமல்லி போலீஸார்தான் காரணம். எனவே சகுந்தலாவின் மரணம் தொடர்பாக சுத்தமல்லி காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸார் பணிநீக்கம் செய்யப்பட்டு, பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சகுந்தலாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லியில் காவல்துறையினர் இரவு நேரத்தில் அத்துமீறி வீடுகளுக்குச் சென்று விசாரணை என்ற பெயரில் அராஜகம் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சகுந்தலாவின் தாயார் ரா. லெட்சுமியம்மாளும் தனியாக மனு அளித்துள்ளார்.
