மதுரையில் இடநெருக்கடியில் முதியோர் இல்லங்கள்: காற்றாடும் சிறார் இல்லங்கள்
கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாதால், மதுரையில் ஆதரவற்ற சிறார் இல்லங்கள் காற்றாடுகின்றன. ஆனால், முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன.
மதுரை மாவட்டத்தில் ஆதரவற்ற சிறார்களுக்காக 19 இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தீயணைப்புத்துறை, சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணித் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு, இளஞ்சிறார் நீதிக் குழுமச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டவை. இந்த இல்லங்களில் 6 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள் தங்கி, அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தார்கள்.
இந்தாண்டு பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாததால், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் பலர் தங்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்கள். தாத்தா, பாட்டி போன்ற உறவினர்கள் உள்ள குழந்தைகளையும் விடுதிப் பொறுப்பாளர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். முழுமையாக ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் குழந்தைகள் மட்டுமே தற்போது இல்லத்தில் தங்கியிருக்கின்றனர்.
அதேநேரத்தில், மதுரை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை. ஆனால், ஆதரவற்ற நிலையில் சாலையில் சுற்றித் திரியும் முதியோர்களை மீட்டுப் புதிதாக இல்லங்களில் சேர்க்க முயன்றால், விடுதிகள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், மருத்துவ, காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டும் என்று ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.
இதுகுறித்துத் தன்னார்வலரான மணிகண்டன் கூறியபோது, "இது மழைக்காலம். குளிரும் கடுமையாக இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் முதியோர்களைச் சாலையில் அநாதரவாக விடுவது அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியும். தயவு செய்து யாரும் அதுபோன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. மனிதநேயத்தோடு நடந்துகொள்ள வேண்டும்.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி அவர்களை இல்லங்களில் அனுமதிக்க வேண்டும். அதேநேரத்தில் அவ்வாறு கைவிடப்பட்டவர்களை உடனடியாகக் காப்பகங்களில் சேர்த்துக்கொள்ள அரசு துறையினரும் உடனுக்குடன் அனுமதியளிக்க வேண்டும்" என்றார்.
