

நிவர் புயலை எதிர்கொள்ள புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துத் தொகுதிகளிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
வங்கக் கடலில் உருவாக்கியுள்ள நிவர் புயல் இன்று (நவ. 25) நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுவை அரசு புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தொகுதி எம்எல்ஏக்களும் பலரும் தங்கள் தொகுதிகளில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்தார்.. தொடர்ந்து, லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் உள்ள அவசர கால பேரிடர் மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, தவளக்குப்பம் தானாம்பாளையம் மற்றும் கடலோர பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"நிவர் புயலையொட்டி தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் சமுதாய நலக்கூடம், பள்ளிகள், திருமண மண்டபங்கள் என 90 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கும், முகக்கவசங்கள் வழங்குவதற்கும், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டால் இன்ஜின் மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது, 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்படுகிறது. காற்று அடிக்கும் போது விளம்பர பதாகைகள் விழுந்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், அதனை அகற்ற அறிவுறுத்தியுள்ளோம். மின்சாரம் தடைப்பட்டால் 12 மணி நேரத்தில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுவை மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டனர். அவர்களது படகுகள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 95 சதவீதம் மீனவர்கள் கரை திரும்பிவிட்டனர். மீதியுள்ள 5 சதவீதம் பேரும் கரை திரும்பி வருகின்றனர்.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தந்த பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர். புதுச்சேரி, காரைக்காலில் அனைத்துத் தொகுதிகளிலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். மக்களுக்கு எந்த உதவி என்றாலும் உடனே செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிகாரிகளும் களப்பணியில் இருப்பார்கள். நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல், மீனவ மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயலின் தாக்கம் மாலைக்கு மேல் அதிகமாக இருக்கும். அப்போது வெளியே வர கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். ஆரம்பத்தில் புதுச்சேரியில் தான் புயல் தாக்கும் என்று கூறினார்கள். தற்போது புதுச்சேரிக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறுகின்றனர். தெளிவான தகவல் மாலைக்குப் பின்னரே தெரியும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.