Published : 30 Oct 2015 03:12 PM
Last Updated : 30 Oct 2015 03:12 PM

லக்ஸ் மல்டிபிளக்ஸை ஜாஸ் சினிமாஸ் வாங்கியது அம்பலம்

தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம், வேளச்சேரியில் உள்ள "ஃபீனிக்ஸ்" வணிக அரங்கத்தில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து 'தி இந்து' ஆங்கில நாளிதழ் பெற்ற தகவலின்படி, முன்னர் "ஹாட்வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் தற்போது "ஜாஸ் சினிமா நிறுவனம்" என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. ஹாட்வீல்ஸ் இஞ்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2005-ம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இயங்கத் தொடங்கியிருக்கிறது.

கடந்த 2014 ஜூலை 14-ல் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் ஜெ.இளவரசி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரை ஜாஸ் சினிமாஸ் என்று மாற்றம் செய்வது பற்றி முடிவெடுக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற அடுத்தக்கட்ட கூட்டத்துக்கு, ஜெ.இளவரசி தலைமை வகித்தார். அக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை சசிகலா வழிமொழிந்துள்ளார்.

கீழே பகிரப்பட்டுள்ள குறிப்பானது இளவரசி தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:

மேலும், மத்திய அரசு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தை ஆராயும்போது, "ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, விநியோகம், திரையிடல் என அனைத்து தொழில்களிலும் ஈடுபடலாம்" என நிறுவன இணைப்பு கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது" தெரியவந்துள்ளது.

பதினோறு திரையரங்குகள் கொண்ட லக்ஸ் சினிமாஸ் நிறுவனம் சான்றிதழ்களைப் பெறுவதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. அவற்றையெல்லாம் சரிசெய்து, கடந்த மார்ச் மாதம்தான் திரைப்படங்களைப் பொது மக்களுக்குத் திரையிடத் தொடங்கியது.

இதற்கிடையில், லக்ஸ் சினிமாஸ் நிறுவனத்தை ஜாஸ் சினிமாஸ் வாங்கிவிட்டதாக பேச்சுகள் சலசலக்கப்பட்டது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. எஸ்.பி.ஐ. சினிமாஸ் இணையதளத்தில் லக்ஸ் சினிமாஸ் அரங்கில் திரையிடப்படும் காட்சிகளை காண டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற வாடிக்கையாளர்கள் ஜாஸ் சினிமாஸ் இணையதளத்துக்கு மாற்றிவிடப்பட்டனர். அப்போதுதான், ஜாஸ் சினிமாஸ், லக்ஸ் சினிமாஸுக்கு கைமாறியது அதிகாரபூர்வமாக அம்பலமானது.

இது குறித்து மேலும் தகவலறிய எஸ்.பி.ஐ., சினிமாஸ், ஜாஸ் சினிமாஸ் நிர்வாக அதிகாரிகளை 'தி இந்து' தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால், யாரும் அழைப்புகளை ஏற்கவில்லை.

கோலிவுட் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, இந்த ஒப்பந்தம் ஆண்டு முற்பகுதியிலேயே போடப்பட்டுவிட்டது. லக்ஸ் சினிமாஸில் 11 திரையரங்குகள் இருப்பதால் அதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய அரசு இணையதளத்திலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சில விஷயங்களை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. அது, கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் கூத்தப்பார் சத்தியமூர்த்தி ஆகியோர் "ஜாஸ்" சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான இவர்களே "மிடாஸ்" நிறுவனத்தின் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே அது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னையிலுள்ள பி.வி.ஆர். திரைப்பட நிறுவனம், இந்த லக்ஸ் சினிமாஸ் திரைப்பட அரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க பேசப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் முறியடித்து ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு கைமாறியிருக்குறது லக்ஸ் சினிமாஸ்.

இது தொடர்பாக, 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியும், தொடர்புடைய ஆவண நகல்களும் ->Jazz Cinemas buys Luxe multiplex

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x