நிவர் புயல்; மக்களைக் காக்க திமுகவினர் களமிறங்கி உதவ வேண்டும்: ஸ்டாலின் வேண்டுகோள்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

பேரிடரில் இருந்து மக்களைக் காக்க திமுகவினர் களமிறங்கி உதவ வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று (நவ. 25) வெளியிட்ட அறிக்கை:

"நிவர் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.

சென்னையில், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினேன்.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு காரணமாக, அதனைத் திறந்துவிடப் பொதுப்பணித்துறை முடிவெடுத்துத் திறந்து விட்டிருப்பதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை 2015-ம் ஆண்டு வெள்ளப் பேரிடர் போன்ற சூழல் மிரட்டி வருகிறது. மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான திமுக நிர்வாகிகளையும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது முதலில் நமக்குத் தேவை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதை மனதில் கொண்டு தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஏறத்தாழ 9 மாதங்களாக கரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தப் புயல், மழைச் சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகிவிடக்கூடாது. தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in